பல லட்ச ரூபாயில் கட்டி வீணாகும் கதர் வாரிய கட்டிடங்கள்
பல லட்ச ரூபாயில் கட்டி வீணாகும் கதர் வாரிய கட்டிடங்கள்
சேவூர்
சேவூரில் பலலட்ச ரூபாய் மதிப்பில் வீணாகும் கதர்கிராம கட்டிடங்களை மாவட்ட நிர்வாகம் சீரமைத்து வேறு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கதர் கிராம வாரிய கட்டிடங்கள்
திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதியில் கதர் கிராம வாரியத்தின் சார்பில் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு இடம் தேர்வு செய்யப்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பில் கதர் கிராம வாரிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் அம்பர் ராட்டை வழங்கி, கதர் கிராம வாரியத்தின் சார்பில் பஞ்சு வழங்கப்பட்டு, பொதுமக்களிடம் நூலாக பெற்று கூலி வழங்கி வந்தன.
மேலும் இந்த நூல் தறிக்காரர்களுக்கு வழங்கப்பட்டு, துணியாக உற்பத்தி செய்யப்பட்டு பெறப்பட்டு வந்தது. இதில் வேட்டி, சர்ட், துண்டு, கதர் சேலைகள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதில் காட்டன், பஞ்சு மட்டுமின்றி பாலியெஸ்டர் வகைகளுக்கு வெளிசந்தையில் இருந்து நூல் வாங்கி நூற்புக்கு வழங்கி வரப்பட்டது.
பெண்களுக்கு வேலை வாய்ப்பு
மேலும் இந்த கட்டிடத்தில் உள்ளேயே கதர்கிராம நூற்பாலை அமைக்கப்பட்டு நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வந்தது. இதன் மூலம் பஞ்சை பட்டை திருத்தி நூலாக உற்பத்தி செய்து வந்தனர்.
இதற்கான பஞ்சு இருப்பு நிலையம் கூட இன்னமும் பழுதடையாமல், அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வேறு உபயோகத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும், பெட்சிட், துண்டு, சேலைகள் ஆகியன ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை மாதத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
கதர் வாரியத்தை வீழ்த்திய பனியன் தொழில்
இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்டத்தின் தலைநகரமான திருப்பூரில் பனியன் உற்பத்தியின் வேகம் அதிகரிக்க தொடங்கியது.மேலும் வெளிநாடுகளுக்கு, தேவைக்கேற்ப, அதிகமாக இங்கிருந்து பின்னலாடைகள் (அனைத்து வகையான உள்ளாடைகள்) விதவிதமான மாடல்களில் தயார் செய்து ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் கதர் கிராம வாரியத்தில் கிடைக்க கூடிய கூலியை விட பின்னலாடை நிறுவனத்தில் கூலி அதிகமாக கிடைத்த காரணத்தால் சிறுக, சிறுக தொழிலாளர்கள் கதர் தொழிலை விட்டு பின்னலாடை தொழிலுக்கு சென்றனர். இதனால் கதர் வாரியம் முடங்கியது. ஆட்கள் பற்றாகுறை ஏற்பட்டு கதர் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. இதனால் கதர் வாரியத்திற்கு ஒதுக்கப்பட்ட இடமும், பல லட்சம் மதிப்பிலான கட்டிடங்கள் கிடப்பில் போடப்பட்டது. சேவூர் கைகாட்டி ரவுண்டானா அருகில், செயல்பட்டு வந்த கதர் கிராம வாரியத்தின் செயல்பாடுகள் பின் தங்கி நாளடைவில் முற்றிலும் நிறுத்தப்பட்டது. தற்போது 20 வருடங்களுக்கு மேலாகியும் எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் ஏக்கர் கணக்கில் கட்டிடங்களுடன் காலியிடங்கள் புல் முளைத்து, புதர் மண்டி வீணாகி வருகிறது.
அரசு அலுவலகங்கள்
இது குறித்து சேவூர் பொதுமக்கள் கூறியதாவது, சேவூரில் பேருந்து நிலையம் இல்லை. அதே போல பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்துவதற்கான இடம் இல்லை. சில மத்திய, மாநில அரசு துறை அலுவலங்கள், குறிப்பாக, தபால் நிலையம், மின்சார வாரிய அலுவலகம், ஆகியவை தனியார் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகிறது. இவைகளை கூட இக்கட்டிடத்திற்கு மாற்றம் செய்யலாம். இனி வரும் அரசு திட்டங்களுக்காவது இக்கட்டிடத்தை உபயோகிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பல லட்ச ரூபாய் மதிப்பிலான கட்டிடங்கள் புதர் மண்டி வீணாகி வருவது வேதனை அளிக்கிறது. எனவே இக்கட்டிடங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.