சூடுபிடிக்காத டைாி விற்பனை


சூடுபிடிக்காத டைாி விற்பனை
x

சூடுபிடிக்காத டைாி விற்பனை

திருவாரூர்

தங்கள் நினைவுகளையும், நடந்த சம்பவங்களையும், எதிர்கால கனவுகளையும் எழுதி வைக்கும் வரலாற்று ஆவணமாக டைரி திகழ்கிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை டைரி எழுதும் பழக்கம் பலருக்கு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வுகளை அந்தந்த தேதிகளில் டைரியில் எழுதி வைத்து, அவற்றை திருப்பிப்பார்க்கும்போது காலக்கண்ணோட்டமாகவே இருக்கும்.

தான் எழுதிய டைரியை தங்கள் பிள்ளைகள் படித்து பார்க்கும் சுவாரஸ்யமும் இருந்தது. சிறிய வயதில் எத்தனை சிரமங்களை சந்தித்தோம் என்பதை எடுத்துக்காட்டும் காலக்கண்ணாடியாக டைரி திகழ்ந்து வந்தது. அன்றாட நடவடிக்கை, சந்தித்த நபர்கள், எதிர்கால லட்சியம் என மனசாட்சியுடன் பேசும் சாதனமாகவே டைரி இருந்தது.

டிஜிட்டல் யுகம்

டிஜிட்டல் யுகம் வளர தொடங்கியதும் மக்களிடம் எழுதும் பழக்கம் குறைந்தது. ஞாபக சக்தி மறைந்தது. அனைத்தையும் செல்போனில், கணினியில் பதிவு செய்யும் முறை வந்தது. எதிர்கால திட்டமிடலை நமக்கு அலாரம் வைத்து ஞாபகப்படுத்தும் வகையில் செல்போன், கணினி திகழ்கிறது. இதன்காரணமாகவே டைரி எழுதும் பழக்கம் மெல்ல, மெல்ல மக்களிடம் குறைந்து போனது.

கொரோனா ஊரடங்கு, தொழில் நசிவு போன்ற காரணங்களாலும், காகிதத்தின் விலை உயர்வு காரணத்தாலும் டைரியை வாங்குவோர் பெருமளவு குறைந்து விட்டனர். டைரியின் உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக விலை உயர்வால் டைரி வாங்குவதை விரும்பவில்லை. கடந்த காலங்களில் ரூ.100-க்கு டைரி விற்பனையான நிலையில் தற்போது குறைந்தபட்சம் ரூ.150 முதல் ரூ.1,000 வரை டைரிகள் விற்பனையாகிறது.

விற்பனை குறைந்தது

தொழில்துறையினர் தனது நண்பர்கள், வர்த்தக தொடர்பு உள்ளவர்களுக்கு தங்கள் நிறுவனத்தின் பெயரில் டைரி தயாரித்து வழங்குவது வழக்கம். ஆனால் தற்போது அதுபோன்ற டைரி தயாரிப்பும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. ஆன்மிகம் சார்ந்த தகவல்கள், பொது அறிவு விஷயம், தொழில் கணக்கீடு சார்ந்த விவரங்கள், பஞ்சாங்கம் உள்ளிட்ட விவரங்களுடன் டைரி விற்பனையாகிறது. பஞ்சாங்கம் பார்க்க டைரியை வாங்குகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் இந்த ஆண்டு டைரி விற்பனை வெகுவாக குறைந்து விட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

எழுதும் பழக்கம் குறைந்தது

கூத்தாநல்லூரை சேர்ந்த பள்ளி ஆசிரியர் முகமது சுபஹான்:- எவ்வளவு நவீன சாதனங்கள் வந்தாலும், டைரி என்ற அந்த வார்த்தையின் வரிகளுக்கு ஈடாக முடியாது. டைரி எழுதும் பழக்கம் தற்போதைய கால கட்டத்தில் குறைந்ததற்கு காரணம், செல்போன் தான். செல்போன் வந்த பிறகு, பேனா பிடித்து எழுதும் பழக்கம் குறைந்து வருகிறது. பேனா பிடித்து எழுதும் பழக்கம் குறையும் போது, டைரி எழுதும் பழக்கமும் படிப்படியாக குறைந்து வருவதற்கு காரணமாக இருக்கலாம். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பெரியவர்கள் டைரி எழுதுவதை முதன்மையாக கடைபிடித்தனர். பெரியவர்கள் டைரி எழுதும் பழக்கத்தை அடுத்த தலைமுறைக்கு பழக்கப்படுத்தவில்லை. தற்போது செல்போன்களிலேயே பதியவைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், செல்போனில் பதிய வைக்கும் பதிவுகள் எந்த நேரத்திலும் அழியக்கூடியது. டைரி எழுதும் பழக்கத்தைக் கற்றுக் கொள்ள போதிய விழிப்புணர்வு இல்லை. இதனால், டைரி எழுதும் பழக்கத்தை பள்ளிகளில் மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கலாம். வீட்டில் உள்ள பெரியவர்களும் அடுத்த தலைமுறைக்கு டைரியின் முக்கியத்துவம் குறித்து விளக்கி கற்று கொடுக்க வேண்டும்.

மலரும் நினைவுகள்

கூத்தாநல்லூரை சேர்ந்த இல்லத்தரசி அகிலா:-

மலரும் நினைவுகளை திரும்பி பார்க்க வைப்பது டைரி. டைரி எழுதும் பழக்கம் இன்று குறைந்ததற்கு காரணம் செல்போன் மோகம் அதிகரித்தது தான். டைரியில் எழுத வேண்டிய எல்லா விஷயங்களையும் இன்று செல்போன் மற்றும் வாட்ச்சுகளில் பேனா இல்லாமல் பதிய வைத்து விடுகின்றனர். இதனால், டைரி எழுதும் பழக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. டைரி எழுதும் பழக்கம் குறைந்து வருவது வருத்தம் அளிக்கிறது. எந்த நேரத்திலும் அழியக்கூடிய செல்போனில் பதிய வைப்பதில் ஆர்வம் கட்டுபவர்கள், எந்த காலத்திலும் அழியாத டைரியை பயன்படுத்த ஆர்வம் காட்டாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. டைரி எழுதும் பழக்கம் குறைந்ததால் தான் டைரி உற்பத்தி மற்றும் டைரி விற்பனை குறைந்து வருகிறது. டைரி அழியாத பொக்கிஷம். அதன் மகத்துவம் குறைந்து வருவது மட்டுமே புரியாத புதிராக உள்ளது.

படிக்கும் பழக்கம் குறைவு

திருவாரூர் செல்வகணேசன்:-

நவீன யூகத்தில் பல்வேறு நல்ல விஷயங்கள் மறைந்து வருகிறது. அதில் டைரி எழுதும் பழக்கமும் குறைந்து வருகிறது.

தற்போது செல்போன், கணனி, இணைதளம் என்ற வளர்ச்சியில், புத்தகங்கள் படிப்பதும், எழுதுவதும் குறைந்து வருகிறது. புத்தாண்டு பிறப்பு என்றாலே காலண்டர், டைரி தான் நினைவுக்கு வரும். இந்த டைரி பல செய்திகளை நினைவுப்படுத்தி கொள்ள உதவும். டைரி எழுத இளைய தலைமுறையினர் யோசிக்கிறார்கள். இதனால் அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது.

திருவாரூர் பாபு:-

கடந்த வந்த பாதையில் நினைவு அலைகளை சுமந்து நிற்பது நாம் எழுதும் டைரியில் மட்டும் இருக்கும். பல செய்திகளை நினைப்படுத்தி கொள்ள டைாி உதவுகிறது. தற்போயை நவீன யுகத்தில் அந்த பழக்கம் மெல்ல, மெல்ல மறைந்து வருகிறது.

இன்றைய யூகத்தில் உண்மையான பேசும் நட்பும் கிடைப்பதே அரிதாகவிட்ட நிலையில், எவரும் தனது வாழ்க்கை சம்பவங்களை டைரியில் எழுத முன்வருவதில்லை. டைரியை யாராவது படித்து விடுவார்கள் என்ற கவலையில் சிலர் எழுதுவதை கைவிட்டுள்ளனர்.

டைரி என்பது வரவு-செலவு கணக்கு மட்டுமின்றி முக்கிய நாட்களை நினைவுப்படுத்தி கொள்ளவும் உதவுகிறது. நம்மை நாம் சரிபடுத்தி கொள்ள உதவும் ஒரு நண்பனாக திகழ்ந்த டைரியை விட்டு நாம் விலகி விட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினா்.


Next Story