சத்து மாவு சாப்பிட்ட 9 பேருக்கு வயிற்றுப்போக்கு
சோளிங்கர் அருகே சத்துமாவில் உணவு தயாரித்து சாப்பிட்ட 6 குழந்தைகள் உள்பட 9 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சோளிங்கர் அருகே சத்துமாவில் உணவு தயாரித்து சாப்பிட்ட 6 குழந்தைகள் உள்பட 9 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சத்துமாவில் உணவு
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த சின்ன பரவத்தூர் கிராமம், அருந்ததி பாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய குழந்தைகளுக்கு பள்ளியில் வழங்கப்பட்ட சத்து மாவை வீட்டில் வைத்துள்ளார். கடந்த சனிக்கிழமை மதியம் மற்றும் இரவு நேரத்தில் சிவகுமார் உள்பட வீட்டிலிருந்த 6 பேர் சத்து மாவில் உணவு தயாரித்து சாப்பிட்டுள்ளனர்.
அவர்களுடன் பக்கத்து வீட்டை சேர்ந்த 3 குழந்தைகளும் சத்து மாவு சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் சிவக்குமார் உள்பட 6 பேருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அதேபோல் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்ட 9 பேரும் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் 3 பேர் தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
6 பேர் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சத்து மாவு சாப்பிட்ட 9 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.