செல்போன் ஆதிக்கத்தால் காணாமல் போகிறதா டைரி?தர்மபுரி பொதுமக்கள் கருத்து
தர்மபுரி:
விஞ்ஞான உலகத்தில் நாம் பாரம்பரியமாக கடைபிடித்து வந்த வாழ்க்கை முறையில் பல மாற்றங்களை சந்தித்து வருகிறோம். அப்படி நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிச்சென்று கொண்டிருக்கிறது டைரி.
காலபெட்டகம்
டைரி என்ற சொல் லத்தீன் மொழியில் இருந்து பிறந்தது. 17-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரான சாம்பல் பிப்ஸ் என்பவர் எழுதிய டைரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களில் டைரிகளை கைகளில் வைத்திருப்பதே ஒரு கவுரவமாக பார்க்கப்பட்டது. ஒவ்வொரு நாளிலும் நாம் செய்த நல்லது, கெட்டதை குறித்து வைத்துக்கொள்ளும் காலப்பெட்டகமாகவும் விளங்கியது. சிக்கலான நேரத்தில் எடுத்த முடிவுகள் பிற்கால சந்ததிக்கு எடுத்துச்சொல்லும் வழிகாட்டியாகவும், வருங்கால சந்ததியினருக்கு அது ஒரு வரலாற்று சுவடாகவும் விளங்கியது என்றால் மிகையாகாது.
அப்படிப்பட்ட டைரிகள் கடந்த காலங்களில் ஒரு பொக்கிஷம் போல் பார்க்கப்பட்டது. குறிப்பாக பல கொலை சம்பவங்களில் கூட ஒரு சாட்சியாக டைரி நின்று பலருக்கும் தண்டனைகளை வாங்கிக்கொடுத்திருக்கிறது.
டைரி என்ற உடன் வளவளப்பான அட்டையுடன் கூடியது என்று நினைக்க வேண்டாம். சாதாரண நோட்டில் கூட நாட்களை குறிப்பிட்டு எழுதுவதும் டைரிதான். டைரிகளில் குறியீடுகள் (கோடுவேர்டு) மூலமும் சிலர் எழுதுவது உண்டு. பிரபலமானவர்கள் தங்களது ரகசிய வாழ்க்கை தகவல்களை அப்படி எழுதி வைப்பது உண்டு. இப்படி டைரிக்கு என்று ஒரு நீண்ட வரலாறு உண்டு.
செல்போனில் பதிவிடும் முறை
ஆனால் இன்றைக்கு செல்போன், கணினி ஆகியவற்றின் வருகையால் டைரி எழுதும் பழக்கம் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது. டைரிகளில் எழுதுவதை பலரும் கணினிகளிலும், செல்போன்களிலும் குறிப்பேடாக பதிவு செய்யும் வழக்கத்தை வைத்துள்ளனர். ஆனால் அது பாதுகாப்பு இல்லாதது என்பதுதான் உண்மை. எனவே, டைரிக்கு நிகர் டைரிதான்.
இருந்தாலும் கொரோனா, காகிதத்தின் விலை ஏற்றம் போன்றவற்றால் டைரிகளின் விலை அதிகரித்துள்ளது. அதை வாங்குவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் டைரிகள் அச்சடிக்கப்பட்டு கடைகளில் அப்படியே தங்கள் வாழ்நாளை கழித்து விடுகிறது. தற்போது ஆன்மிக தகவல்களை எழுதிவைக்கவும், பொதுஅறிவு விவரங்களை எழுதி வைக்கவும், தொழில் கணக்கீடுகளை சேகரிக்கவும், பஞ்சாங்கத்துக்கும் டைரிகள் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு டைரிக்கு வாழ்நாள் ஒரு ஆண்டுதான். ஜனவரி மாதம் 1-ந் தேதி டைரி எழுதத்தொடங்குவார்கள். டிசம்பர் 31-ந் தேதியுடன் ஒரு வருட அனுபவத்துடன் முடித்து விடுவார்கள். அடுத்த ஆண்டு புது டைரி வாங்கி அதில் எழுத தொடங்குவார்கள். புத்தாண்டு தொடங்கி விட்டது. புது டைரியில் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை எழுத தொடங்க வேண்டும்.
காலமாற்றத்தில் டைரி பயன்பாடு குறைந்து கொண்டிருக்கிறதா? அல்லது அதிகரித்திருக்கிறதா? பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
மகிழ்ச்சி ஏற்படும்
தர்மபுரியை சேர்ந்த முன்னாள் எம்.பி. பாரிமோகன்:-
ஒவ்வொரு ஆங்கில புத்தாண்டின் தொடக்கத்திலும் புதிய டைரியை வாங்கி முக்கிய நிகழ்வுகளை எழுதும் பழக்கத்தை பல ஆண்டுகளாக தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். ஒவ்வொரு நாளும் சந்திக்கும் முக்கிய பிரமுகர்கள், முக்கிய நிகழ்ச்சிகள், நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் ஆகியவற்றை டைரியில் எழுதும்போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும். அந்த தகவல்கள் பின்னர் தேவைப்படும் நேரங்களில் பயன்படும். பல்வேறு பணிகள் மற்றும் தொழில்களில் ஈடுபடுபவர்கள் இனிவரும் நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முக்கிய விவரங்கள், குறிப்புகளை டைரியில் எழுதும்போது அவற்றை மீண்டும் பார்த்து செய்ய வேண்டிய பணிகளை எளிதாக நினைவுபடுத்தி கொள்ளலாம். கடந்த காலத்தில் அனுபவங்களை டைரிகளில் எழுதியவர்கள் இப்போது வரவு- செலவு கணக்கு எழுதவே டைரிகளை பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக இளைஞர்களிடம் டைரி எழுதும் பழக்கம் முழுமையாக குறைந்து விட்டது.
சமூக ஊடகங்கள்
தர்மபுரி மாவட்ட ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் தண்டபாணி:-
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் படித்த காலத்தில் டைரி எழுதும் பழக்கம் மாணவர்கள், இளைஞர்களிடம் பரவலாக இருந்தது. நானும் கல்லூரி பருவத்தில் டைரி எழுதி இருக்கிறேன். அப்போது புத்தாண்டு பரிசாக டைரி மற்றும் பேனாவை பலர் வழங்குவதை பார்த்து இருக்கிறேன். ஆனால் செல்போன்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியபின் டைரிகளை பயன்படுத்துவது, தினமும் இரவில் டைரி எழுதுவது ஆகிய பழக்கங்கள் பெரும்பாலும் குறைந்துவிட்டன. குறிப்பாக வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்த பின் டைரிகள் அவற்றின் முக்கியத்துவத்தை இழக்க தொடங்கிவிட்டன. இப்போது பெரும்பாலானவர்கள் இரவில் செல்போனுடன் தூங்க செல்கிறார்கள். புத்தாண்டில் டைரிகளை பரிசாக கொடுப்பதும் இப்போது குறைந்து வருகிறது.
மறுக்க முடியாது
மொரப்பூரை சேர்ந்த டைரி விற்பனையாளர் இன்பரசன் :-
கொரோனா ஊரடங்கு காலத்துக்கு பிறகு டைரி வியாபாரம் வெகுவாக குறைந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எங்கள் கடையில் டைரி விற்பனை அதிகரித்துள்ளது. டைரி வாங்குபவர்களில் பலர் பிறருக்கு பரிசு அளிப்பதற்காக வாங்குகிறார்கள். குறிப்பாக தமிழ் டைரிகளில் முக்கிய நாட்கள், பஞ்சாங்க குறிப்புகள் இடம் பெற்றுள்ளதால் வயதானவர்கள் டைரிகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். வியாபாரம் செய்பவர்களில் பலர் வரவு, செலவு கணக்குகளை எழுதவும், தொழில் தொடர்பான முக்கிய விவரங்களை குறித்து வைக்கவும் இன்னும் டைரிகளை பயன்படுத்துகிறார்கள். எனவே செல்போன்களின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் பலரிடம் டைரி எழுதும் பழக்கமும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
தனி உரிமை பாதுகாப்பு
கல்லூரி மாணவர் வேல்முருகன்:-
இப்போது கல்லூரிகளில் படிக்கும் இளைஞர்களில் பெரும்பாலானோருக்கு டைரி பயன்படுத்தும் பழக்கம் இல்லை. நவீன செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளதால் அவற்றில் பல்வேறு தகவல்களை பதிவு செய்து சேமித்து வைக்கும் வசதி உள்ளது. தேவைப்படும் நேரத்தில் அந்த தகவல்களை உடனடியாக பார்த்து பயன்படுத்தி கொள்ள முடியும். செல்போன்களை போல் வெளியிடங்களுக்கு டைரிகளை எளிதாக எடுத்து செல்ல முடியாது. இப்போது இளைஞர்கள் டைரி எழுதுவதைவிட கணினியில் பதிவு செய்வதையே விரும்புகிறார்கள். அதில் தனி உரிமையை பாதுகாக்கும் வசதி இருப்பது முக்கிய காரணமாகும்.
மறதி இருப்பவர்களுக்கு உதவும்
பாலக்கோட்டை சேர்ந்த குடும்பத்தலைவி தையல்நாயகி:-
டைரி எழுதுவது நல்ல பழக்கம். நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள டைரி எழுதுவது உதவும். குறிப்பாக மறதி இருப்பவர்களுக்கு டைரி எழுதும் பழக்கம் பெரிதும் பயன்படும். நம் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை பதிவு செய்து பின்னர் டைரி மூலம் அவற்றை நினைவுபடுத்தி பார்க்கும் போது மனமகிழ்ச்சி ஏற்படும். இளைஞர்கள், மாணவர்களிடையே டைரி எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும். அதன் மூலம் அவர்களுடைய சிந்தனை திறன் மேம்படும். டைரி எழுதும் பழக்கம் மனதை பக்குவப்படுத்தும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.