நீரோடையில் கழிவுநீரை கலக்கும் ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


நீரோடையில் கழிவுநீரை கலக்கும் ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

நீரோடையில் கழிவுநீரை கலக்கும் ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருப்பூர்

பொங்கலூர்

பொங்கலூர் அருகே கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சிங்கனூர் பிரிவு அருகே அபூர்வா ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள நீரோடையில் விடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் அருகில் உள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகள் கழிவுநீரை ஓடையில் விடும் ஓட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொங்கலூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சியிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஓட்டலில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு குழாய் அமைத்து நீரோடையில் கழிவுநீர் திறந்து விடப்படுகிறது. இந்த கழிவுநீரானது நீரோடையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படுகிறது. அருகில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நீரையும் பாதித்துள்ளது. துர்நாற்றத்தை கட்டுப்படுத்த ஓட்டல் நிர்வாகம் ஒருவித ரசாயனத்தை பயன்படுத்துவதாக தெரிகிறது. இந்த ரசாயனம் கலந்த நீர் அருகில் உள்ள கிணறுகளில் கலந்து அந்த நீரை குடிக்கும் மாடுகள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு வளர்த்து வந்த மீன்களும் இறந்து விட்டது. ஓட்டல் நிர்வாகம் ஏற்கனவே அந்த பகுதியில் உள்ள ஆழ்துளைகிணறுகளிலும் கழிவுநீரை கலந்து விடுவதாக தெரிகிறது. சுத்திகரிக்கப்படாத இந்த கழிவுநீரை அப்படியே நீரோடையில் விடுவதால் பெரும் சுற்றுச்சூழல் மாசுபாடும் ஏற்பட்டு வருகிறது. நீரோடைகளில் கழிவு நீரை கலக்கக்கூடாது என நீதிமன்ற உத்தரவு இருந்தும் அதனை மதிக்காமல் செயல்படும் ஓட்டல் நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையும் பெற்று தர வேண்டும். இந்த சட்டவிரோத செயலை உடனடியாக தடுக்க ஒன்றிய நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் முன்வர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

-------


Next Story