பாலியல் வழக்கில் விடுவிப்பதாக ஏமாற்றி போலீசார் ரூ.50 லட்சம் வாங்கினார்களா?
பாலியல் வழக்கில் விடுவிப்பதாக ஏமாற்றி போலீசார் ரூ.50 லட்சம் வாங்கினார்களா? என்பது தொடர்பாகவும், பணம் கொடுத்தவர் தற்கொலை செய்தது பற்றியும் சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.
பாலியல் வழக்கில் விடுவிப்பதாக ஏமாற்றி போலீசார் ரூ.50 லட்சம் வாங்கினார்களா? என்பது தொடர்பாகவும், பணம் கொடுத்தவர் தற்கொலை செய்தது பற்றியும் சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.
பாலியல் வழக்கு
சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியைச் சேர்ந்த சகுந்தலாதேவி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், என்னுடைய கணவர் நாச்சியப்பன். இவர் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தேவகோட்டை மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில் இருந்து அவரை விடுவிக்க ரூ.50 லட்சம் கொடுக்குமாறு போலீசார் கேட்டுள்ளனர். இதை நம்பி போலீசாரிடம் அந்த தொகையை என் கணவர் கொடுத்துள்ளார்.
ஆனால் அந்த பணத்தை பெற்றுக் கொண்டு அவருக்கு எதிராக போக்சோ மற்றும் எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் மனம் உடைந்த அவர், கடந்த 25.1.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பை சந்தேக மரணம் என கீரனூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
என் கணவர் தற்கொலை செய்ததற்கு போலீசார்தான் காரணம். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கல்லல் போலீசில் புகார் அளித்தேன். வழக்குபதிவு செய்யவில்லை. இந்த விவகாரத்தை உள்ளூர் போலீசார் முறையாக விசாரிக்க வாய்ப்பில்லை. எனவே என் கணவர் சம்பந்தப்பட்ட வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
சி.பி.சி.ஐ.டி. விசாரணை
இந்த வழக்கு நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கில் டி.ஐ.ஜி.யை எதிர்மனுதாரராக சேர்க்கிறேன். மனுதாரரின் கணவர் தற்கொலை வழக்கு, மனுதாரர் போலீசார் மீது அளித்த புகார் ஆகியவற்றை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும். இவற்றை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 மாதத்தில் விரிவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.