பணியின் போது உயிரிழந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதி உதவி
பணியின்போது உயிரிழந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது
தேனி மாவட்டம் ஹைவேவிஸ் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பழனிகுமார். இவர் கடந்த மார்ச் மாதம் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பாதுகாப்பு பணிக்கு சென்ற போது, நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் கடந்த 1993-ம் ஆண்டு போலீஸ் துறையில் சேர்ந்தார். இதையடுத்து அவருடைய குடும்பத்துக்கு உதவி செய்வதற்காக 1993-ம் ஆண்டு போலீசாராக பணியில் சேர்ந்தவர்கள் இணைந்து, 'உதவும் கரங்கள்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் அதே ஆண்டில் பணியில் சேர்ந்த போலீசாரிடம் நிதி திரட்டினர்.
அந்த வகையில் ரூ.7 லட்சத்து 6 ஆயிரம் நிதி திரட்டப்பட்டது. அந்த நிதியை போலீசாரின் சார்பில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிகுமாரின் குடும்பத்துக்கு வழங்கும் நிகழ்ச்சி பண்ணைப்புரத்தில் இன்று நடந்தது. அவருடைய குடும்பத்தினரிடம் நிதி உதவிக்கான காசோலையை போடி போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ், சின்னமனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் வழங்கினர். இதில் நிதி திரட்டிய போலீசார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.