டீசல் விலை, காப்பீடு தொகை உயர்வு எதிரொலி: தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்ட மினி பஸ் உரிமையாளர்கள்; கிராம மக்களின் வரவேற்பை பெற்ற போக்குவரத்து மீண்டும் புத்துயிர் பெறுமா?


டீசல் விலை, காப்பீடு தொகை உயர்வு எதிரொலி:  தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்ட மினி பஸ் உரிமையாளர்கள்;  கிராம மக்களின் வரவேற்பை பெற்ற போக்குவரத்து மீண்டும் புத்துயிர் பெறுமா?
x

டீசல் விலை, காப்பீடு தொகை உயர்வு எதிரொலி காரணமாக மினி பஸ் உரிமையாளர்கள் தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கிராம மக்களின் வரவேற்பை பெற்ற இந்த போக்குவரத்து மீண்டும் புத்துயிர் பெறுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

ஈரோடு

டீசல் விலை, காப்பீடு தொகை உயர்வு எதிரொலி காரணமாக மினி பஸ் உரிமையாளர்கள் தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கிராம மக்களின் வரவேற்பை பெற்ற இந்த போக்குவரத்து மீண்டும் புத்துயிர் பெறுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

மினி பஸ்கள்

கிராம மக்களின் வாழ்வாதாரத்துக்காக மத்திய, மாநில அரசுகள் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் கிராமங்களையும், நகரத்தையும் இணைக்கும் பாலமாக மினி பஸ்கள் திட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த 1997-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்தபோது தொடங்கப்பட்ட மினி பஸ்கள் திட்டம் கிராம மக்களுக்கு வரபிரசாதமாக திகழ்ந்தது.

அதுவரை போக்குவரத்து வசதியே இல்லாமல் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட பல கிராமங்கள் நகரத்துடன் இணைந்தது. இதனால் மருத்துவ வசதி பெறுவது முதல் விவசாய விளை பொருட்களை நகரத்துக்கு கொண்டு செல்வது வரை பெரும் உதவியாக இருந்து வந்தது. இவ்வாறு கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு ஆணிவேராக திகழ்ந்து வந்த மினி பஸ் தொழில் நஷ்டத்தை நோக்கி செல்வதால் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

தொழிலை கைவிடும் நிலை

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை பல கிராமங்கள் இன்றுவரை பொது போக்குவரத்து வசதி இல்லாமல் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்ல மினிபஸ்களையே நம்பி உள்ளார்கள். ஆனால் டீசல் விலை உயர்வு, காப்பீடு கட்டண தொகை உயர்வு, வரி உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் தொழிலையே கைவிடும் நிலைக்கு மினி பஸ் உரிமையாளர்கள் தள்ளப்பட்டு உள்ளார்கள். இதனால் இந்த தொழிலையே நம்பியுள்ள டிரைவர், கண்டக்டர்களின் வாழ்வாதாரமும் கேள்வி குறியாகி உள்ளது.

ஈரோடு மாநகர் பகுதியிலும் பெரியவலசு, வில்லரசம்பட்டி, கொல்லம்பாளையம், சூரம்பட்டிவலசு, கனிராவுத்தர்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மினிபஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்புக்கு முன்பு இருந்தநிலையை காட்டிலும் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான மினி பஸ்கள் மட்டுமே தற்போது ஓடுகிறது. எனவே நஷ்டத்தில் உள்ள இந்த தொழில் புத்துயிர் பெற வேண்டுமென்றால் அரசு உதவ வேண்டும் என்பதே மினி பஸ் உரிமையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விலை உயர்வு

இதுகுறித்து மினிபஸ் உரிமையாளர் சுரேஷ்குமார் கூறியதாவது:-

தமிழகத்தில் மினிபஸ்கள் இயங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டபோது ஈரோடு மாவட்டத்தில் சுமார் 250 மினி பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் தற்போது 20 சதவீதம் முதல் 30 சதவீதம் மினி பஸ்கள் மட்டுமே ஓடுகிறது. இதற்கு முக்கிய காரணமாக டீசல் விலை உயர்வு உள்ளது. பஸ்களின் டயர், ஆயில், உதிரி பாகங்களின் விலை உயர்ந்து விட்டது. இதனால் பஸ்களின் பராமரிப்பு செலவு அதிகமாகிறது. அதேபோன்று காப்பீடு தொகை 5 மடங்கு உயர்ந்துவிட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 ஆயிரத்து 500 செலுத்தி வந்த காப்பீடு தொகை தற்போது ரூ.44 ஆயிரத்து 500 செலுத்த வேண்டியுள்ளது.

டீசல் விலை உயர்வு காரணமாக பஸ்களை இயக்குவதே பெரும் சிரமம் ஏற்படுகிறது. கிராமப்புற சாலைகளில் இயக்கப்படுவதால் ஒரு லிட்டருக்கு 3 கிலோ மீட்டர் தான் மைலேஜ் கிடைக்கும். அதனால் பயணிகள் இல்லாத மதிய நேரங்களில் பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும், வரி, வாகனத்தை புதுப்பிக்கும் கட்டணம் உயர்வு போன்றவையும் பெரும் சுமையாக உள்ளது. கொரோனா காலத்துக்கு பிறகு தொழில் பெரும் நஷ்டத்தை நோக்கி சென்றுவிட்டது.

அரசு மானியம்

இருசக்கர வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்து விட்டதால், வருமானம் குறைந்துவிட்டது. இத்தகைய சூழ்நிலையால் ஏராளமானவர்கள் மினி பஸ்களை இயக்க முடியாமல் நிறுத்தி விட்டார்கள். இந்த தொழிலையே கைவிடும் நிலைக்கு சென்றுவிட்டார்கள். இந்த நிலை தொடர்ந்தால் மினி பஸ்கள் இயக்கமே இல்லாமல் போய்விடும்.

எனவே மினி பஸ்களின் டீசல் பயன்பாட்டுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும். காப்பீட்டுக்கும், வரிக்கும் சலுகைகளை அறிவித்தால்தான் பெரும் சுமையில் இருந்து தப்பிக்க முடியும். மினிபஸ்கள் இயக்கப்படும் வழித்தடங்களையும் மாற்றி அமைக்க வேண்டும். கிராம மக்களின் சேவையாக செய்து வரும் இந்த தொழிலை நலிவடையும் நிலையில் இருந்து மீட்க அரசு முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாழ்வாதாரம்

மினிபஸ் டிரைவர் கோபி கூறுகையில், "நான் கடந்த 4 ஆண்டுகளாக மினி பஸ் டிரைவாக உள்ளேன். கொரோனா பரவலுக்கு முன்பு மினி பஸ்களின் இயக்கம் சீராக காணப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் 2 ஆண்டுகளாக நாங்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வந்தோம். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகும் சில மாதங்கள் நிலைமை சீராகவில்லை. இதனால் பஸ்களில் பயணிகளின் வருகையும் குறைவாக இருந்தது. எங்களுடைய வாழ்வாதாரம் இதையே நம்பி உள்ளது. கிராமப்புறங்களில் சாலைகள் மோசமாக இருப்பதால் வாகனங்களின் ஸ்பிரிங் லீப் போன்ற உதிரி பாகங்கள் அடிக்கடி பழுதடைகிறது. எனவே கிராமங்களில் சாலைகளை மேம்படுத்த வேண்டும்", என்றார்.

கண்டக்டர் தியாகு கூறும்போது, "பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அலுவலகத்துக்கு செல்பவர்கள் தான் மினி பஸ்களில் ஏறுகிறார்கள். இதனால் காலை, மாலை நேரங்களில் கூட்டம் காணப்படுகிறது. ஆனால் மதிய நேரம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் பயணிகளின் கூட்டம் மிகவும் குறைவாக உள்ளது. டீசல் விலை அதிகமாக இருப்பதால், குறைந்தது 15 பயணிகள் இருந்தால்தான் பஸ்களை இயக்க முடியும். 4, 5 பயணிகளுடன் மினி பஸ்களை இயக்கும்போது உரிமையாளருக்கு நஷ்டம் ஏற்படுகிறது", என்றார்.


Related Tags :
Next Story