தமிழகத்தில் டீசல் விலை குறைக்கப்படாததால் லாரி உரிமையாளர்கள் கடும் பாதிப்பு-அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் பேட்டி
கிருஷ்ணகிரி:
தமிழகத்தில் டீசல் விலை குறைக்கப்படாததால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா கூறினார்.
மனு
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிரசர் ஓனர்ஸ் பெடரேஷன் அமைப்பினர், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா தலைமையில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டியை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
தொடர்ந்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெ.காருப்பள்ளி-தேன்கனிக்கோட்டை சாலையில், 5-க்கும் மேற்பட்ட ஜல்லி கிரசர் யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. இங்கு, 1,500-க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். இந்த பகுதியிலிருந்து வரும் கிரசர் லாரிகளை கொரட்டகிரி சாலை வழியாக செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்.
இதேபோல, 2005 பிப்ரவரி 9-ந் தேதி அமைக்கப்பட்ட கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் பகல் கொள்ளை நடக்கிறது. தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகளில், 22 சுங்கச்சாவடிகளை அகற்றுவதாக அரசு உறுதியளித்த நிலையில் செயல்படுத்தவில்லை. சேலம்-சென்னை 6 வழிச்சாலை, 20 ஆயிரம் கோடிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில் அதை தமிழக அரசு தடுக்கும் போது, சுங்கச்சாவடிகளை அகற்ற ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
தடுக்க வேண்டும்
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடிக்கு வசூலாக வேண்டிய 400 கோடி ரூபாய்க்கு, 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்ட நிலையிலும், சுங்கச்சாவடி அகற்றப்படவில்லை. இதை தமிழக அரசு தடுக்க வேண்டும். பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் டீசல் விலை குறைவாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் டீசல் விலை குறைக்கப்படவில்லை. இதனால் லாரி உரிமையாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே டீசல் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.