சிறுமலையில் 129 வகை வண்ணத்துப்பூச்சி இனங்கள் உள்ளன; மாவட்ட வன அலுவலர் தகவல்


சிறுமலையில் 129 வகை வண்ணத்துப்பூச்சி இனங்கள் உள்ளதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார்.

திண்டுக்கல்

சிறுமலையில் 129 வகை வண்ணத்துப்பூச்சி இனங்கள் உள்ளதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார்.

சிறுமலை

திண்டுக்கல் அருகே 'குட்டி கொடைக்கானல்' என்று அழைக்கப்படும் சிறுமலை உள்ளது. சுற்றுலா தலமாக விளங்கி வரும் சிறுமலைக்கு திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வருகை தருகின்றனர்.

கடல் மட்டத்தில் இருந்து 400 முதல் 1,600 மீட்டர் வரையிலான உயரம் கொண்ட சிறுமலை மலைத்தொடர் சுமார் 13 ஆயிரத்து 987 ஹெக்டேர் பரப்பளவை கொண்டது. இதில் புதர்க்காடுகள் தொடங்கி சோலைக்காடுகள் வரை பல்வேறு வாழ்விடங்கள் மற்றும் பரந்த புல்வெளிகள் உள்ளன.

மேலும் சிறுமலையில் அரியவகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களும் உள்ளன. இதில் குறிப்பாக பல்வேறு வகை வண்ணத்துபூச்சி இனங்கள் சிறுமலையில் உள்ளன. இதற்காகவே சிறுமலையில் வண்ணத்துப்பூச்சி பல்லுயிர் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு

இந்தநிலையில் திண்டுக்கல் மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஸ் ஆலோசனையின்பேரில் சிறுமலையில் கடந்த 2 நாட்களாக வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கோவை இயற்கை மற்றும் வண்ணத்துப்பூச்சி அமைப்பு, திண்டுக்கல் வனக்கோட்டம் ஒருங்கிணைந்து இந்த கணக்கெடுப்பை நடத்தியது. இந்த கணக்கெடுப்பு பணி இன்று முடிவடைந்தது. இதில் பல்வேறு வகை வண்ணத்துப்பூச்சி இனங்கள் சிறுமலையில் உள்ளது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் பிரபு கூறியதாவது:-

சிறுமலையில் கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 129 வகை வண்ணத்துபூச்சி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சிறுமலையின் இயற்கை ஆரோக்கிய தன்மையை காட்டுகிறது. இங்கு கண்டறியப்பட்ட இனங்கள் 5 வண்ணத்துப்பூச்சி குடும்பங்களை சேர்ந்தவை. அவை ஸ்வாலோடெயில்ஸ் வகை வண்ணத்துப்பூச்சிகள் (10), வெள்ளை மற்றும் மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சிகள் (22), தூரிகை-கால் வண்ணத்துப்பூச்சிகள் (36), ப்ளூஸ் வகை வண்ணத்துப்பூச்சிகள் (39) மற்றும் ஸ்கிப்பர்ஸ் வகை வண்ணத்துப்பூச்சிகள் (22) ஆகும்.

பறவை இனங்கள்

மேற்கு தொடர்ச்சி மலைகளில், பழனி மலைப்பகுதியில் அதிக அளவில் காணப்படும் நிம்பாலிடே இனத்தை சேர்ந்த பழனி புஸ் பிரவுன் வகை வண்ணத்துப்பூச்சியை கண்டறிந்தது, இந்த ஆய்வின் சிறப்பம்சமாகும். இந்த வகை வண்ணத்துப்பூச்சி சிறுமலையின் உயரமான பகுதிகளில் உள்ளன. மேலும் தமிழகத்தின் கிழக்கு தொடர்ச்சி மலையில் முதன்முறையாக லைகெனிடே இனத்தைச் சேர்ந்த பிளேன் வகை வண்ணத்துப்பூச்சி கண்டறியப்பட்டுள்ளது, சிறுமலையில் தான். சிறுமலையில் எதிர்காலத்தில் பறவை வகைகள், அந்துப்பூச்சிகள் மற்றும் பிற சிறிய விலங்கினங்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story