மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள்
மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தொிவித்துள்ளனா்.
ஆதார் கார்டு என்பது நாட்டு மக்களின் அடையாளமாக மட்டுமின்றி அரசு திட்டங்கள், மானியங்களில் முறைகேடுகளைத் தடுக்கும் ஆயுதமாகவும் மாறி இருக்கிறது. சமையல் கியாஸ் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமானவுடன் ஒரு கோடி போலி இணைப்புகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன.
இணைப்பது கட்டாயம்
தற்போது வங்கிக் கணக்கு எண், வருமான வரி கணக்கு எண், வருங்கால வைப்பு நிதி எண், வாக்காளர் அடையாள அட்டை எண் வரிசையில், தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணுடனும் ஆதாரை இணைக்க வேண்டியது கட்டாய மாக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி இனி மின்சார கட்டணம் செலுத்துகிறவர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஆதார் எண்ணை இணையதளதின் வழியாக இணைப்பது அவசியமாகிறது. ஏற்கனவே 100 யூனிட் இலவச மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த உத்தரவு கடந்த 15-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இதுபற்றி மக்கள் கருத்தை அறிய முயன்றபோது பெரும்பாலானோர் 'அப்படியா? எங்களுக்கு ஒன்றும் தெரியாதே...யாரும் சொல்லலேயே..!' என்று அப்பாவித்தனமாக கேட்டனர்.
அமைச்சர் விளக்கம்
தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் www.tnebltd.gov.in/adharupload இணைய வழி மூலம் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின்சார கட்டணத்தை கட்ட முடியும் என்று கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் இணைப்பு 100 யூனிட் இலவச மின்சாரத்தை பறிக்கும் முயற்சியா? என்று வீட்டு வாடகை தாரர்களின் மத்தியில் அச்சம் எழுந்த வேளையில், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, ' ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தாலும் கூட ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் மானியம் மின்சாரம் தொடரும். ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று பரப்பப்படுவது வெறும் வதந்தி' என்று விளக்கம் அளித்தார்.
எனினும் மக்கள் மத்தியில் குழப்பமும், அச்சமும் தொடர்ந்து வரும் வேளையில், 'ஆன்லைன்' மூலம் ஆதார் எண்ணை இணைப்பதிலும் அவ்வப்போது தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டு மின்நுகர்வோர்களை பரிதவிக்கவிட்டு வருகிறது.
சிறப்பு முகாம்கள் வேண்டும்
இது குறித்து மக்கள் வெளிப்படுத்திய கருத்துகள் வருமாறு:-
கடலூர் வடுகப்பாளையம் அஞ்சம்மாள்:- மின் மீட்டர் அருகில் அட்டை வைத்திருந்தாலும் கணக்கீடு செய்ய வரும் ஊழியர், அதில் எழுதுவதில்லை. மின் கட்டணம் எவ்வளவு என்று கேட்டால், நீங்கள் மின் கட்டணம் செலுத்தும் அலுவலகத்திற்கு சென்று கேளுங்கள் என்கிறார்கள். தற்போது மின் கட்டணத்தில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். கிராமப்புறங்களில் எழுத படிக்க தெரியாத நபர்கள் தான் வீடுகளில் இருப்பார்கள். அவர்களுக்கு இது பற்றிய விவரம் தெரியாது. ஆகவே மின் கட்டணம் குறிக்க வரும் ஊழியரே, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் பயன் உள்ளதாக இருக்கும். விரைவில் சிறப்பு முகாம்களை நடத்தி ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவகாசம் தேவை
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுந்தர்:- தற்போது தான் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. ஏற்கனவே மின் கட்டணம் செலுத்தும் போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக உடனடியாக கட்ட முடியாது. தற்போது ஆதார் எண்ணை இணைக்க சொல்கிறார்கள். அதன்படி மின் வாரிய அலுவலகத்திற்கு சென்றால், சர்வர் பிரச்சினை என்கிறார்கள். ஆதார் எண்ணை இணைக்க தாமதம் ஏற்பட்டால், அபராத தொகை விதிப்பார்கள். இது கூடுதல் சுமையாக இருக்கும். இதற்கு போதிய காலஅவகாசம் வழங்க வேண்டும். இல்லையெனில் பழைய நடைமுறையே தொடர வேண்டும்.
100 யூனிட் மின்சாரம் வழங்கப்படுமா?
சிதம்பரம் முத்துக்குமரன்:- மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தேவையற்றது. இதனால் பொதுமக்கள் அலைகழிக்கப்படுவார்கள். வழக்கம் போல் பொதுமக்கள் தங்களுக்கான மின் கட்டணத்தை செலுத்த அனுமதிக்க வேண்டும். ஏற்கனவே 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் இலவசம். ஆனால் இதை தடுக்கும் வகையில் இந்த செயல்பாடு உள்ளதாக தோன்றுகிறது. இதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். ஒருவர் 5 வீடுகள் வைத்திருப்பார். அவருக்கு இந்த 100 யூனிட் வரை மின்சாரம் 5 வீடுகளுக்கும் வழங்கப்படுமா? அல்லது ஒரு வீட்டுக்கு மட்டும் வழங்கப்படுமா? என்ற குழப்பம் உள்ளது. இல்லை மானியம் அனைத்தும் ரத்து செய்யப்படுமா? என்ற குழப்பமும் உள்ளது. இதையும் அரசு விளக்க வேண்டும்.
தவறு நடக்காது
வக்கீல் அருள்குமார்:- மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது வரவேற்க கூடிய விஷயமாகும். தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவும், ஒழுங்குபடுத்துவதற்காகவும் ஆதார் எண் மின் இணைப்பு கணக்குடன் இணைக்கப்படுகிறது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தபோது ஒருவருக்கு இரண்டு இடங்களில் வாக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அது செல்லாததாகி விட்டது. வாக்காளர்களை ஒழுங்குபடுத்தியது போல், மின்வாரியத்தில் நடைபெறும் முறைகேடுகளும் இதன் மூலம் தவிர்க்கப்படும். இதனால் மானியம் தடைபடும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. யூனிட் அதிகரிக்க, அதிகரிக்க மின் கட்டணமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. அரசு பொதுமக்களுக்கு மானியம் கொடுப்பதை விட உயர்த்திய மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
சர்வர் பிரச்சினை
விருத்தாசலம் குமார்:- மின் இணைப்பு கணக்கு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை வரவேற்கிறோம். அப்போது தான் தவறாக மின் இணைப்பை பயன்படுத்துபவர்களை கண்டறிந்து முறைகேடுகளை தடுக்க முடியும். ஏழை எளிய மக்களுக்கு அரசு வழங்கும் மானியங்கள் சரியாக சென்றடையும். ஆதார் எண்ணை இணைக்கும் போது, ஏழை விவசாயிகளுக்கும் உரிய சலுகைகள் கிடைக்கும். எந்த நடைமுறையை அரசு கொண்டு வந்தாலும் அதற்கு எதிர்ப்பும் இருக்கத் தான் செய்யும். ஆனால் அதனை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஆதார் எண்ணை மின் கணக்கு எண்ணுடன் இணைத்தால் அரசுக்கும் லாபம். மக்களுக்கும் லாபம். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தபடி மாதந்தோறும் மின் கணக்கீடு எடுத்தால் ஏழை-எளிய மக்கள் பயனடைவார்கள். இதையும் உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குளறுபடிகளை களைய வேண்டும்
சிதம்பரம் விக்னேஷ்:- மின் கட்டணம் செலுத்துவதற்காக முன்பு மின்வாரிய அலுவலகங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து வந்தோம். வரிசையில் நிற்பதற்கு சண்டை வரும். தற்போது வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் மின் கட்டணத்தை செலுத்தி வருகிறோம். மின் இணைப்போடு, ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதையும் இருந்த இடத்தில் இருந்து பதிவு செய்ய முற்பட்டால் சர்வர் பிரச்சினை உள்ளது. உடனடியாக பதிவு செய்ய முடியவில்லை. இதில் உள்ள குளறுபடிகளையும் களைய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மின்வாரியம் ஆராயுமா?
மின்சார கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், மின் கட்டணம் செலுத்தும் கடைசி தேதியில் இருந்து ஆதாரை இணைக்க 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கி மின்சார வாரியம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்வாரிய அலுவலகங்களில் நேற்று முதல் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மின்வாரிய அதிகாரிகள் செய்து வருகின்றனர். ஆனால் சர்வர் பிரச்சினையால் சில மின்நுகர்வோர்களின் ஆதார் எண் 'லிங்க்' ஆகாததால் அவர்களால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அபராத நடவடிக்கை, மின் இணைப்பு துண்டிப்பு போன்ற பிரச்சினைகளை மின்நுகர்வோர்கள் சந்திக்கும் நிலை ஏற்படும். எனவே இப்பிரச்சினைகளை மின்சார வாரியம் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மின்நுகர்வோர்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.