இறந்தவரின் உடலை புதைப்பதில் சிரமம்
வல்லாகுளத்துப்பாளையத்தில் உள்ள மயானத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் இறந்தவரின் உடலை புதைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து வேறு வழியின்றி தகனம் செய்துவிட்டு உறவினர்கள் சென்றனர்.
அடிப்படை வசதிகள் இல்லை
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே அத்திப்பாளையம் ஊராட்சியில் வல்லாகுளத்துப்பாளையம் காலனி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மயானத்தில் போதுமான அடிப்படை வசதி ஏதும் இல்லை. இதனால் பல ஆண்டுகளாக மழை காலங்களில் தண்ணீர் சூழ்ந்து நிற்பது வழக்கமாக உள்ளது. அத்துடன் மயானத்திற்கு செல்ல போதுமான சாலை வசதி இல்லை. அதோடு மயானத்தை சுற்றி முழுவதிலும் தற்போது முட்புதர்களும், செடி-கொடிகளும் அதிகளவில் வளர்ந்து வருகிறது. இதனால் கொடிய விஷம் கொண்ட பாம்புகள், விஷ ஜந்துக்களின் நட மாட்டமும் அதிகரித்துள்ளது. இந்த பிரச்சினையால் மயானத்துக்கு செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் இப்பகுதி மக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் மயானத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் மற்றும் தகன மேடை அமைப்பதோடு, போதிய வடிகால் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பலமுறை ஒன்றிய, ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்துள்ளனர். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
முதியவர் உடல் தகனம்
இந்த நிலையில் நேற்று வயது முதிர்வு காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அவரின் உடலை சுடுகாட்டிற்கு புதைப்பதற்காக எடுத்து சென்றனர். பின்னர் அங்கு குழி வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட குழியில் சிறிது நேரத்தில் ஊற்று ஏற்பட்டு தண்ணீர் நிரம்பியது. பிறகு தண்ணீரை வெளியேற்ற முயன்றபோது மீண்டும் ஊற்று மூலம் நீர் ஊறிக்கொண்டே இருந்தது. இதனால் பெரிதும் அவதிப்பட்ட உறவினர்கள் வேறு வழியின்றி அந்த முதியவரின் உடலை தீ மூட்டி தகனம் செய்துவிட்டு சென்றனர்.
எனவே பொதுமக்களின் நலன் கருதி இங்குள்ள மயானத்தை சுற்றிலும் மழைநீர் வடிகால் வசதி, சுற்றுச்சுவர், தகனமேடை மற்றும் நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர மாவட்ட, ஒன்றிய நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்த உள்ளோம் என அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.