தோண்டப்பட்ட குழியை மூட வாகன ஓட்டிகள் கோரிக்கை
தோண்டப்பட்ட குழியை மூட வாகன ஓட்டிகள் கோரிக்கை
திருப்பூர்
'டாலர் சிட்டி' நகரமான திருப்பூரில் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதற்காக பல்ேவறு இடங்களில் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. அதற்காக பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த பணிகள் மந்தநிலையில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பாதிப்பு அடைகின்றனர். பல இடங்களில் தோண்டப்படும் குழிகள் பணி நிறைவடைந்த பிறகும் மூடப்படாமல் கிடப்பில் போடப்படுவதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூர் அண்ணா நகர் அருகே வி.கே.ஆர். தோட்டம் பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. ஆனால் 10 நாட்கள் கடந்த நிலையில் இன்னும் அந்த குழி மூடப்படாமல் இருக்கிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் காலை, மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படுகிறார்கள். எனவே இந்த பகுதியில் தோண்டப்பட்ட குழிகளை விரைவில் மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் செல்ல வழி செய்ய வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.