விழுப்புரம் மாவட்டத்தில்மதுவிலக்கு சோதனை சாவடிகளில் டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு சோதனை சாவடிகளில் டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு செய்தாா்.
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக மதுபாட்டில்கள், சாராயம் கடத்தலை தடுக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட எல்லையில் 8 மதுவிலக்கு சோதனை சாவடிகள் உள்ளன. இதில் 24 மணி நேரமும், போலீசார் பணியமர்த்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், இந்த சோதனை சாவடிகள் செயல்பாடு குறித்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் நேற்று நள்ளிரவு திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது, கெங்கராம்பாளையத்தில் உள்ள மது விலக்கு சோதனை சாவடிக்கு சென்ற அவர், அங்கு காவலர்கள் முறையாக பணியில் உள்ளார்களா? என்று பார்வையிட்டார். மேலும், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள் சரியாக இயங்குகிறதா என்றும் ஆய்வு செய்தார். மேலும் சோதனைச்சாவடியில் பணியில் இருந்த போலீசாருக்கு அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவருடன் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் ஆகியோர் உடன் இருந்தார்.