திருநகரில் குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய கார்
திருநகரில் குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் சிக்கியது
திருப்பரங்குன்றம்,
மதுரை மாநகராட்சி 94-வது வார்டு பகுதியான திருநகர் பகுதியில் கடந்த 2 மாதத்திற்கு மேலாக முல்லை பெரியார் குடிநீர் திட்டத்தின் கீழ் தெருக்களில் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டப்பட்டபோது திருநகர் மக்களின் குடிநீர் ஆதாரமாக செயல்பட்டு வரக்கூடிய காவிரி கூட்டுக் குடிநீர்குழாய் மற்றும் வைகை கூட்டு குடிநீர் குழாய்கள் உடைந்து சேதமாகின. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் தோண்டப்பட்ட அந்த பள்ளத்தை சரியாக மூடாமல் சென்றதால் சமீபத்தில் திருநகர் 8-வது பஸ் நிறுத்தம் மற்றும் 4-வது பஸ் நிறுத்தம்அருகே அடுத்தடுத்து 2 முறை அரசு பஸ்சின் சக்கரம் பள்ளத்தில் சிக்கியது.
அதேபோல் நேற்று மாலையில் 7-வது பஸ் நிறுத்தம் அருகே முல்லை பெரியார் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஒரு காரின் சக்கரம் சிக்கியது. இதையடுத்து ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் ஒரு மணி நேரம் போராடி காரை மீட்டனர்.