ரெயில் பெட்டிகளின் வரிசையை காண்பிக்கும் டிஜிட்டல் திரைகள்
திண்டுக்கல்லில் பயணிகளுக்கு புதிய வசதியாக ரெயில் பெட்டிகளின் வரிசையை காண்பிக்கும் டிஜிட்டல் திரைகள் பொருத்தப்பட்டு உள்ளன.
ரெயில் நிலையம்
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 80-க்கும் மேற்பட்ட ரெயில்கள் நின்று செல்கின்றன. இதன்மூலம் தினமும் 8 ஆயிரம் பேர், திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வருகின்றனர். இதையொட்டி ரெயில் பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் வந்த வண்ணம் உள்ளன. அதன்படி சுரங்கப்பாதையின் அருகே ரெயில்களின் எண், பெயர், அவை நிற்கும் நடைமேடை ஆகியவற்றை அறிவிக்கும் மெகா டிஜிட்டல் பலகை வைக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் ஒவ்வொரு ரெயிலும் வரும்போது அதன் பெட்டிகள் நிறுத்துமிடத்தை பயணிகள் தெரிந்து கொள்ள டிஜிட்டல் பலகைகள் மீண்டும் பொருத்தப்பட்டு வருகின்றன. ரெயில் நிலையத்தில் உள்ள 5 நடைமேடைகளிலும் தலா 26 டிஜிட்டல் பலகைகள் பொருத்தப்படுகின்றன. இவை ஒருசில நாட்களில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
ரெயில் பெட்டிகளில் வரிசை
இதற்கிடையே ஒவ்வொரு ரெயிலிலும் முன்பதிவு பெட்டிகள், முன்பதிவு இல்லாத பெட்டிகள், 3 வகையான குளிர்சாதன பெட்டிகள் உள்ளன. இந்த பெட்டிகளின் வரிசை ஒவ்வொரு பெட்டியிலும் ஒவ்வொரு விதமாக இணைக்கப்பட்டு இருக்கும். எனவே குளிர்சாதன பெட்டிகள், முன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் எந்த வரிசையில் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள புதிதாக டிஜிட்டல் திரை வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் திரை சுரங்கப்பாதையின் நுழைவுவாயில், சுரங்கப்பாதையின் உள்ளே என 3 இடங்களில் பொருத்தப்பட்டு உள்ளது. இவை ஒருசில நாட்களில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. அதன்மூலம் ரெயில்களில் பெட்டிகளின் வரிசையை பயணிகள் தெரிந்து கொண்டு நடைமேடைக்கு செல்லலாம் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.