தனுஷ்கோடியில் சிதைந்து கிடக்கும் கட்டிடங்கள் புனரமைக்கப்படுமா?
தனுஷ்கோடியில் சிதைந்து கிடக்கும் கட்டிடங்கள் பழமை மாறாமல் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள் உள்ளனர்.
ராமேசுவரம்,
58 ஆண்டுகளுக்கும் மேலாக தனுஷ்கோடியில் சிதைந்து கிடக்கும் கட்டிடங்கள் பழமை மாறாமல் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள் உள்ளனர்.
தனுஷ்கோடி
ராமேசுவரத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதி. கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயலால் தனுஷ்கோடி நகரமே அழிந்து போனது. அப்போது சில கட்டிடங்கள் சேதமாகி கடந்த 58 ஆண்டுகளுக்கு மேலாக மண்ணோடு மண்ணாக புதைந்து இடிந்து சேதம் அடைந்த நிலையில் காட்சி அளித்து வருகிறது.
அதிலும் தனுஷ்கோடி பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்று மட்டுமே பல வருடங்களாக ஓரளவு ஆலய அமைப்பு கொண்ட கட்டிடமாக காட்சி அளித்து வந்தது.
அதன் ஒரு பகுதியும் கடந்த ஆண்டு பலத்த சூறாவளி காற்று வீசியபோது முழுமையாக இடிந்து விழுந்தது. இந்த கிறிஸ்தவ ஆலய கட்டிடம் பவளப்பாறைகளால் ஆன சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்ட கட்டிடமாகும். இந்த கல்லானது தண்ணீரில் போட்டால் மிதக்கும் தன்மை கொண்டது.
வேதனை
இதனால் தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள கற்களை பெயர்த்து எடுத்துச்செல்லும் நிலையும் இருந்து வருகின்றது. 58 ஆண்டுகளுக்கு மேலாக மண்ணோடு மண்ணாக புதைந்து கிடக்கும் புயலால் அழிந்துபோன கட்டிடங்களை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த மனவேதனையுடன் பார்த்து செல்கின்றனர்.
இங்குள்ள கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவது என சுற்றுலாப்பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
கோரிக்கை
எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் மத்திய அரசு ஒதுக்கும் சுற்றுலாத் துறை நிதியின் மூலம் புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதியில் உள்ள கட்டிடங்களை புனரமைக்கவும் மற்றும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் பொழுதுபோக்கி விளை யாடும் வகையில் அனைத்து விளை யாட்டு சாதனங்களுடன் கூடிய பூங்கா ஒன்றை தனுஷ் கோடியில் அமைக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் சுற்றுலா ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.