பழுதடைந்து கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள்
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பழுதடைந்து கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்களால், நோயாளிகள் தண்ணீருக்காக அலைந்து திரிகின்றனர்
கடலூர்
அரசு தலைமை ஆஸ்பத்திரி
கடலூர் மஞ்சக்குப்பத்தில் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு கடலூர் மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் 700-க்கும் அதிகமானோர் உள்நோயாளிகளாக தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். ஆஸ்பத்திரியில் உள்ள அறைகள் மற்றும் வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க நூற்றுக்கும் மேற்பட்டோர் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் பணியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆஸ்பத்திரியில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக குழந்தைகள் வார்டு, மகப்பேறு வார்டுக்குள் சென்றாலே கடும் துர்நாற்றம் தான் வீசுகிறது. அங்குள்ள கழிவறைகள் மற்றும் வளாகத்தை முறையாக சுத்தம் செய்வதில்லை. இதனால் வீசும் துர்நாற்றத்தால், அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
குடிநீருக்காக அலையும் நோயாளிகள்
இதேபோல் ஆஸ்பத்திரி வளாகத்தில் அவசர சிகிச்சை வார்டிலும், அதன் பின்புறமுள்ள கட்டிடத்திலும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் உள்ளன. மேலும் நோயாளிகளுக்கு தடையின்றி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் ஆங்காங்கே குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் பழுதாகி கிடப்பதால், குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. அவசர சிகிச்சை பிரிவில் உள்ள சுத்திகரிப்பு எந்திரத்திலும் சுடுதண்ணீர் வருவதில்லை.
இந்த எந்திரத்தில் தண்ணீர் வரும் குழாயும் பழுதடைந்திருப்பதால் சொட்டு சொட்டாக தண்ணீர் வடிகிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் குடிநீருக்காக அலைந்து திரிகின்றனர். தற்போது வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தண்ணீர் தேவையும் நோயாளிகளுக்கு அதிகரித்து இருக்கும் நிலையில், பழுதான சுத்திகரிப்பு எந்திரங்களை சரி செய்து தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடவடிக்கை
இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், அவசர சிகிச்சை பிரிவில் தங்கியுள்ள எங்களுக்கு முறையாக குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு வெளியில் உள்ள கடைகளுக்கு சென்று பணம் கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறையை பயன்படுத்த முடியாத அளவுக்கு சுகாதார சீர்கேடு மிகுந்து காணப்படுகிறது. துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ஒரு சிலர் மட்டும் வேறு வழியின்றி அவசர கதியாக மூக்கை பிடித்துக் கொண்டு உள்ளே சென்று வருகின்றனர். மாவட்டத்தின் தலைமை ஆஸ்பத்திரிக்கே இந்த நிலை என்றால், மாவட்டத்தில் உள்ள பிற அரசு ஆஸ்பத்திரிகள் பற்றி சொல்லவே தேவையில்லை. எனவே ஆஸ்பத்திரியில் தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதுடன், கழிவறை மற்றும் வார்டு அறைகளை சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.