பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி


பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி
x

தினத்தந்தி புகாா் பெட்டி

ஈரோடு

ஆபத்தான குழி

ஈரோடு செங்கோடம்பள்ளம் விஜி கார்டனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழி தோண்டப்பட்டது. ஆனால் அதை அப்படியே மூடாமல் விட்டு விட்டார்கள். இதனால் இந்த குழிக்குள் பலர் விழுந்து காயம் அடைந்து உள்ளனர். எனவே ஆபத்தான இந்த குழியை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

செந்தில், ஈரோடு.

பாலம் பயன்பாட்டுக்கு வருமா?

அவல்பூந்துறையில் இருந்து பண்ணைக்கிணறு செல்லும் சாலையில் லிங்காத்தாகுட்டை பகுதி உள்ளது. இந்த பகுதியில் சிறிய பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன. ஆனால் பணி முடிந்தும் இந்த சிறிய பாலங்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சுற்றி செல்கின்றன. இதனால் எரிபொருள் செலவு அதிகமாகிறது. எனவே பணி முடிந்த பாலங்களை பயன்பாட்டுக்கு விட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், லிங்காத்தாகுட்டை.

நிழற்குடை தேவை

மொடக்குறிச்சி ஒன்றியம் லக்காபுரம் நால்ரோடு பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள் பஸ்சில் ஏறி ஈரோடு, வெள்ளக்கோவில், சிவகிரி, மொடக்குறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறார்கள். இதனால் இந்த பஸ் நிறுத்தத்தில் ஏராளமான பயணிகள் பஸ்சுக்காக காத்திருப்பார்கள். ஆனால் பயணிகள் காத்திருப்பதற்கு நிழற்குடை வசதி இல்லை. எனவே பயணிகளின் நலன் கருதி லக்காபுரம் நால்ரோடு பகுதியில் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், லக்காபுரம்.

குண்டும், குழியுமான ரோடு

கோபியில் குப்பம்மாள் லே-அவுட்டி எஸ்.பி.நகரில் உள்ள ரோடு மிகவும் மோசமாகவும், குண்டும், குழியுமாகவும் காணப்படுகிறது. இதனால் நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து ரோட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி

பஸ் இயக்க வேண்டும்

அந்தியூரில் இருந்து நகலூர் வழியாக அத்தாணி, கோபிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. காலை 7.10 மணி முதல் இரவு 7மணி வரை 5 முறை இயக்கப்பட்டது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டது. அதன் பிறகு பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளிக்கூடம். கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அனைவாின் நலன் கருதி நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அந்தியூா்

பாராட்டு

கோபி திருமலை நகர் முதல் வீதியில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி சிலாப் போட்டு மூடப்பட்டது. ஆனால் அதன் அருகில் உள்ள பெரிய குழி மூடப்படாமல் இருந்தது. எனவே அந்த குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழியை மூடினார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி செய்தி வெளியிட்டு் உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டு்க்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கோபி


Next Story