தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான அங்கன்வாடி மையம்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, தென்னம்பாடி ஊராட்சி கூத்தகுடி பகுதியில் ஏராளமான குழந்தைகள் உள்ளனர். இவர்கள் படிக்கும் வகையில் இப்பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்த அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகள் கட்டிடத்தின் வராண்டாவில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சிதிலமடைந்து காணப்படும் அங்கன்வாடி மையத்தை அகற்றிவிட்டு புதிய அங்கன்வாடி மையம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கூத்தகுடி.
சுகாதார சீர்கேடு
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையம், தெற்கு ரத வீதி, கோனார் லைன், வடக்கு ரத வீதி, பழைய சந்தைப்பேட்டை, பழையகள்ளுக்கடை தெரு, என்.ஜி.ஓ. காலனி ஆகிய பகுதிகளில ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக தெற்கு ரத வீதியில் 100-க்கும் மேற்பட்ட பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கீரனூர்.
மின்கம்பங்கள் விழும் அபாயம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டியில் உள்ள அறந்தாங்கி சாலையின் ஓரத்தில் 2 மின்கம்பங்கள் அருகருகே உள்ளன. இந்த 2 மின்கம்பங்களை பயன்படுத்தி அதன் நடுப்பகுதியில் விளம்பர பதாகையை கட்டி உள்ளனர். தற்போது ஆடி மாதம் என்பதால் பலத்த காற்று அடிக்கும்போது, இந்த மின்கம்பங்கள் சேதம் அடைந்து சாலையில் விழும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் சாலையில் விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சரவணன், கே.புதுப்பட்டி.
கால்நடை மருத்துவமனை வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் காரையூர் அருகே எம்.உசிலம்பட்டி உள்ளது. இதன் சுற்றுவட்டார கிராமங்களான சூரப்பட்டி, வடக்கிப்பட்டி, ஆவாம்பட்டி, வெள்ளையக்கவுண்டம்பட்டி, அம்மாபட்டி, பில்லனிவயல், முள்ளிப்பட்டி உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் ஆடு, மாடு, கோழி, நாய்கள் என அதிக அளவில் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நோயால் பாதிக்கப்பட்ட மாடு, ஆடுகளை சிகிச்சைக்காக காரையூர் அல்லது சடையம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே கால்நடை வளர்ப்பவர்களின் கஷ்டத்தை போக்கவும், கால்நடைகளை பாதுகாக்கவும் எம்.உசிலம்பட்டியில் கால்நடை மருத்துவமனை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
விவசாயிகள், காரையூர்.