தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தேங்கி நிற்கும் கழிவுநீர்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி டி.இ.எல்.சி. சாலையில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் முன்பகுதியில் உள்ள பேரூராட்சி மழைநீர் வடிகாலில் அப்பகுதியில் உள்ள கடைகளில் இருந்து விடப்படும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளி வளாகத்தில் துர்நாற்றம் வீசுவதோடு மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. அந்த பகுதியில் கோழி சந்தையும் நடைபெறுவதால் சந்தைக்கு வரும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கறம்பக்குடி.
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் இருந்து திருச்சிக்கு தினமும் ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் போதிய பஸ் வசதி இன்றி அந்த நேரத்திற்கு வரும் பஸ்சில் பயணிப்பதால் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் சிலர் படியில் தொங்கியபடி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து காலை, மாலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மாணவர்கள், கீரனூர்.
அடிபம்பு பயன்பாட்டிற்கு வருமா?
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சியில் காமராஜர் சாலை பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக சத்தியமூர்த்தி ஊரணி எதிரில் பல ஆண்டுகளுக்கு முன்பு அடிபம்பு அமைக்கப்பட்டது. இதனை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த அடிபம்பு பழுதடைந்ததை தொடர்ந்து பயனற்று காணப்படுகிறது. இதனால் அருகில் உள்ள திருமயம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள், இப்பகுதி மக்கள் போதுமான குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த அடிபம்பை சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ரமேஷ், திருமயம்.
பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள பொன்னன்விடுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. கட்டிடத்தின் முகப்பு பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளன. ஒரு வகுப்பறையை பயன்படுத்த முடியவில்லை. இதனால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பொன்னன்விடுதி.