தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

முட்புதர்களை அகற்ற கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் தரைப்பாலத்திற்கு அருகே முட்புதர்கள் மற்றும் கோரை புற்கள் மண்டி கிடக்கின்றன. 10 அடி உயரத்திற்கு முட்கள் வளர்ந்து இருப்பதால் நீரோட்டம் பாதிக்கப்படுகிறது. மேலும் தண்ணீர் தேங்கி மாசு அடைந்து வருகிறது. இதனால் ஆற்று நீரை பயன்படுத்துபவர்கள், ஈம கிரியை உள்ளிட்ட சடங்குகளை செய்ய வருபவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். இந்த முட்புதரில் சிலர் கழிவு பொருட்களை வீசி செல்வதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே திருமணஞ்சேரி அக்னி ஆற்று பாலம் அருகே மண்டி கிடக்கும் முட்புதர்களை அகற்ற வேண்டும்.

பொதுமக்கள், திருமணஞ்சேரி.

ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே சடையம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான மறவாமதுரை, சங்கம்பட்டி, சொரியம்பட்டி, உடையாம்பட்டி, படுதினிப்பட்டி, ஈச்சம்பட்டி, கங்காணிப்பட்டி, பல்லவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளது. இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டால் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தான் செல்ல வேண்டி உள்ளது. மேலும் பஸ் வசதிகளும் சரி வர கிடையாது. எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி சடையம்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரமேஷ், சடையம்பட்டி.

கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் இருந்து திருப்புனவாசலுக்கு நகர பஸ் மாலை 6.10 மணிக்கு தினமும் செல்கிறது. இதில் அந்த பகுதியில் பள்ளிகள் முடிந்து வீட்டிற்கு செல்லும் மாணவர்கள் ஆபத்தான நிலையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணத்தை மேற்கொள்கின்றனர். மாணவர்கள் இந்த பஸ்சை விட்டால் வேறு பஸ்கள் கிடையாது. இரவு 7 மணிக்கு தான் தனியார் பஸ் திருப்புனவாசலுக்கு வருகிறது. இந்த பஸ்சில் மாணவர்கள் சென்றால் வீட்டிற்கு செல்ல அதிக நேரம் ஆகிறது. எனவே 6.10 மணிக்கு வரும் பஸ்சில் மாணவர்கள் முண்டியடித்து கொண்டு அந்த பஸ்சில் ஏறுகின்றனர். எனவே பள்ளி மாணவர்களுக்கு வசதியாக மாலை 5 மணிக்கு கூடுதலாக பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருப்புனவாசல்.

டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மழையூரில் கறம்பக்குடி-புதுக்கோட்டை பிரதான சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் இந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவிகள் பெரும் சிரமப்படுகின்றனர். சாலையோரத்தில் டாஸ்மாக் கடை உள்ளதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே பள்ளிக்கூடம் அருகே செயல்படும் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மழையூர்.


Next Story