தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருச்சி மாவட்டம்,மணப்பாறை அக்ரகாரம் தெருவில் உள்ள ரேசன் கடை பகுதியில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இவற்றில் ஏராளமான பிளாஸ்டிக் கவர்கள் அதிக அளவில் கொட்டப்படுவதினால் அவை காற்றில் பரந்து அப்பகுதி முழுவதும் குப்பை மேடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மணப்பாறை, திருச்சி.
ஆபத்தான மின்கம்பம்
திருச்சி மாநகராட்சி திருவரங்கம் காந்தி ரோடு மேம்பாலம் கீழே நேரு தெரு சாலையோரம் மின்கம்பம் அமைக்கப்பட்டு அருகில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கருணாநிதி, கல்லக்குடி, திருச்சி.