தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள காட்டூர் ரெயில் நிலையம் மூடப்பட்டிருந்தது. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட எந்த ரெயிலும் இந்த ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது. இது சம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தற்போது காலையில் திருச்சி நோக்கி செல்லும் ரெயிலும், மாலையில் அரியலூர் நோக்கி செல்லும் ரெயிலும் நின்று செல்கின்றன. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

ஆசை தம்பி, லால்குடி.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருச்சி மாநகராட்சி 52-வது வார்டுக்கு உட்பட்ட சவேரியார் கோவில் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்கள் செல்லும் வகையில் சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளதால் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சவேரியார் கோவில் தெரு.

ஆபத்தான மின்கம்பம்

திருச்சி மாவட்டம், சிறுகனூர் மின் பகிர்மான பகுதி எம்.ஆர்.பாளையம் அரசினர் மாணவர் விடுதிக்கு எதிர்ப்புறம் உள்ள வீதியில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மெசியா ஸ்டாலின், எம்.ஆர்.பாளையம்.

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்மாற்றி

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள கண்டோன்மெண்ட் வ.உ.சி. சாலையோரம் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது மின்மாற்றியை தாங்கி நிற்கும் 2 மின்கம்பங்களின் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் இப்பகுதியில் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதுடன். கடைகளில் வைக்கப்பட்டுள்ள மின்சாதன பொருட்களும் சேதம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அன்பழகன், திருவரங்கம்.

செயலற்ற செயற்கை நீர்வீழ்ச்சி

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் ட்ரங்க்ரோடு செக்போஸ்ட் அருகில் ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது. அதன் மையத்தில் வண்ண விளக்குகளின் ஒளிவெளிச்சத்துடன் கூடிய செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டு திருச்சி நகருக்குள் நுழையும் அனைவரையும் கவரும் வகையில் எழிலாகவும், சிறப்பாகவும் செயல்பட்டு வந்த நிலையில், தற்சமயம் பொலிவிழந்தும் செயலற்றும் உள்ளது. எனவே நகரின் நுழைவு வாயிலாக உள்ள அவ்விடத்தில் மீண்டும் புதுப்பொழிவுடன் செயல்படுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பரமேஸ்வரன், திருவானைக்காவல்.


Next Story