தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

எரியாத தெரு விளக்குகள்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பிலிமிசை கிராமத்தில் இரவு நேரத்தில் தெருவிளக்குகள் சரியாக எரிவது இல்லை. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் இப்பகுதியில் நடந்து செல்ல பொதுமக்கள், பெண்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பிலிமிசை.

குடிநீர் இன்றி மக்கள் அவதி

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் வருவது இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் சமைப்பதற்கும், குடிப்பதற்கும், தங்களின் அன்றாட தேவைக்கும் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் வரும் குடிநீரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், நாட்டார்மங்கலம்.

சாலையின் நடுவே உள்ள மின்கம்பம்

பெரம்பலூரில் எளம்பலூர் பிரதான சாலையில் கம்பன்நகர் 2-வது தெரு சந்திக்கும் இடத்தில் தனியார் சூப்பர் மார்க்கெட் அருகில் மின்கம்பம் சாலையின் அகலத்தை பெருமளவு அடைத்தவாறு உள்ளது. சினிமா தியேட்டர், நடேசன் நகர், திருமலை நகர், கம்பன்நகர் 2-வது தெரு, முத்துநகர் 3-வது தெரு, கணேசா காலனி ஆகிய இடங்களில் சாலைகளின் அகலம் குறுகலாக உள்ளது. மேலும் சுதந்திர இந்தியாவின் ஆட்சி காலத்தில் பெரம்பலூர் பேரூராட்சி அந்தஸ்தில் இருந்தபோது அமைக்கப்பட்ட ஓரிரு மின்கம்பங்கள் சாலையின் நடுவே உள்ளது. ஆகவே பாதசாரிகளின் நலன்கருதியும், இருசக்கர, இலகுரக வாகனங்களின் சீரான போக்குவரத்து வசதிக்காகவும், எளம்பலூர் சாலையில் கம்பன்நகர் 2-வது தெரு சந்திக்கும் பகுதியில் உள்ள மின்கம்பத்தை சாலை ஓரத்திற்கு மாற்றி அமைத்து தர சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருமலைநகர்.

புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும்

பெரம்பலூர் அருகே கோனேரிபாளையம் கிராமத்தில் உள்ள சில தார்சாலைகள் குண்டும், குழியுமாகவும், போக்குவரத்துக்கு லாயகற்ற நிலையிலும் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதிகளில் புதிதாக தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கோனேரிபாளையம்.

சாலையோர வியாபாரிகளால் போக்குவரத்துக்கு இடையூறு

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தை சுற்றி போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரத்தை சில வியாபாரிகள் ஆக்கிரமித்து கொண்டு பழக்கடை, பூக்கடை, தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகின்றனர். இதனால் புதிய பஸ் நிலையத்துக்கு பஸ்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.


Next Story