தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

வீடுகளுக்குள் புகும் கழிவுநீர்

திருச்சியில் உள்ள இ.ஆர். மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் உள்ள புதிய தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கழிவுநீர் வாய்க்கால் தூர்ந்து போன நிலையில் கழிவுநீர் செல்ல வழியின் மழைபெய்யும்போது இப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது. இதனால் இப்பகுதியில் நோய் பரவுவதுடன் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள் அவதி

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சியை சேர்ந்த ஆளிபட்டியில் இருந்து மணப்பாறை செல்லும் கிராம சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த கிராம சாலைதான் மணப்பாறை-ஆளிபட்டி வழியாக சின்ன உடையாப்பட்டி மற்றும் மேட்டூராளிபட்டி வரைக்கும் சென்று பின்பு கொட்டப்பட்டி-படுகளம் பூசாரிபட்டி சாலையை இணைக்கிறது. இந்த நிலையில் இந்த சாலையில் செல்ல வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தானியங்கி கிக்னல் அமைக்கப்படுமா?

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் சன்னதி வீதியும் காந்தி ரோடும் இணையும் ட்ரங்க்ரோட்டில் மாம்பழச்சாலையிலிருந்தும், நம்பர் 1டோல்கேட்டிலிருந்தும் வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகின்றது. இதனால் ஶ்ரீரங்கத்திலிருந்து திருவானைக்காவலுக்கும், திருவானைக்காவலில் இருந்து ஶ்ரீரங்கத்திற்கும் வாகனங்களில் செல்பவர்களும், பாதசாரிகளும் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளதோடு விபத்து ஏற்படக்கூடிய அசாதாரண சூழ்நிலையும் நிலவுகிறது. எனவே இவ்விடங்களில் தானியங்கி சிக்னல் அமைத்தோ அல்லது போக்குவரத்து காவலர்களை நியமித்தோ போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

கழிவுநீர் வாய்காலில் கொட்டப்படும் குப்பைகள்

திருச்சி-பெரம்பலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள சர்வீஸ் சாலை தொடங்கும் இடத்தில் இடது புறம் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கழிவுநீர் வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்படுவதினால் கழிவுநீர் செல்ல வழியின்றி அடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குறுகிய சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

திருச்சி மாவட்டம், லால்குடி மெயின்ரோடு வாளாடி ரெயில்வே மேம்பாலம் மிகவும் குண்டும், குழியுமாகவும், குறுகிய சாலையாகவும் உள்ளது. இதனால் சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது சாலையோரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்தும், செப்பணிட்டும் பாதுகாப்பான வாகனப்பயணம் மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story