தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அகற்றப்படாத தரைப்பாலம்
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கருப்பம்பட்டிக்கும், தங்கநகருக்கும் இடையேயான வண்ணாந்துறை மேம்பால பணிகள் நிறைவடைந்து, பயன்பாட்டிற்கு வந்தும் தற்காலிகமாக போடப்பட்ட தரைப்பாலம் அகற்றப்படாமல் உள்ளது. தற்சமயம் நீர்வரத்து அதிகமாக உள்ள நிலையில், தரைப்பாலத்தில் உள்ள குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வயல் வெளிகளில் புகுந்து விவசாயத்தை பாதிப்பதுடன் மண் அரிப்பும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தரைப்பாலத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கருப்பம்பட்டி.
முறிந்து விழுந்த மின்கம்பம்
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி பி.மேட்டூரில் இருந்து புளியஞ்சோலை செல்லும் வழியில் கொள்ளுமோடு அருகே வயல்வெளியில் அமைக்கப்பட்டு உள்ள மின்கம்பம் முறிந்து மின்தடை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கொள்ளுமோடு.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி பேரூராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக பஸ் நிலையம் சாலைப் பகுதி சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பஸ் நிலையத்திற்கு தினசரி சுமார் 100 பஸ்கள் திருச்சியில் இருந்து சிதம்பரம், கடலூர், அரியலூர், திருமானூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், புள்ளம்பாடி.
கருவேல மரங்களால் காயம் அடையும் மக்கள்
திருச்சி-சிதம்பரம் சாலையில் லால்குடி-பூவாளூர் இடையே சாலையின் இருபுறத்திலும் கருவேல மரங்கள் மற்றும் செடி, கொடிகள் முளைத்து சாலையை ஆக்கிரமித்துள்ளன. இதனால் பஸ்களில் பயணம் செய்யும்போது ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணம் செய்பவர்கள் மீது முட்கள் அடிக்கிறது. இதனால் அவர்கள் காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் சாலையோரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நான்கு சக்கர வாகனங்கள் வரும்போது சாலையோரம் ஒதுங்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கல்லகம்.
சீரமைக்கப்படாத நூலகம்
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள தீரன்நகரில் ஊர்புற நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள், மின் இணைப்பு வசதிகள் செய்து தரப்படாததால் வாசகர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். புத்தகங்களை முறையாக வைக்க அலமாரிகள் இல்லாமல் குப்பை போல் அங்கும், இங்குமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், தீரன் நகர், துறையூர்.