தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சிதிலமடைந்த பள்ளி கட்டிடம்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம் கீழபெரம்பலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1964-ம் ஆண்டு தொடங்கப்பட்டு பொன்விழா கண்டுள்ளது. ஆனால் இப்பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் ஒரேஒரு கழிவறை மட்டுமே உள்ளது. பள்ளி வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுகிறது. மழைக் காலத்தில் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குவதால், அந்த நாட்களில் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கீழபெரம்பலூர்.
குழப்பமடையும் வாகன ஓட்டிகள்
பெரம்பலூர்-அரியலூர் நெடுஞ்சாலையில் க.எறையூர் கிராமத்திற்கு செல்லும் பிரிவு சாலை உள்ளது. இந்த சாலை வழியாக குவாரி மற்றும் கிரஷருக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் வந்து செல்கின்றன. அதே நேரத்தில் பிரிவு சாலை எதிரே மெயின் ரோட்டில் பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் இருபுறமும் பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதற்கிடையில் சாலையின் இரும்பு தடுப்புகள் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் க.எறையூர் பிரிவு சாலையில் இருந்து டிப்பர் லாரிகளும், பஸ் நிறுத்தத்தில் பயணிகளை பஸ்கள் ஏற்றி இறக்கியும், அரியலூர்-பெரம்பலூர் மெயின் ரோட்டில் இருபுறமும் இருசக்கர வாகனங்கள், கார், பஸ், லாரிகள் வந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் குழப்பத்தில் சரியான முடிவு எடுப்பதற்குள் தினமும் விபத்துக்கள் நடக்கின்றது. எனவே மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை இணைந்து க.எறையூர் பிரிவு சாலை இடத்தை ஆய்வு செய்து விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க போர் கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், க.எறையூர்.
அரசு பள்ளி அமைக்கப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், ஆய்க்குடி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் பள்ளியில் படிக்க வேண்டுமானால் அருகில் உள்ள ஊர்களுக்கும், இப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியிலும் படிக்க வேண்டிய நிலை உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும்போது அரசு சலுகைகள் எதுவும் கிடைக்கப்படாததால் இப்பகுதியில் உள்ள ஏழை பெற்றோர் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் அரசு பள்ளி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்வேந்தன், ஆய்க்குடி.
போக்குவரத்திற்கு இடையூறு
பெரம்பலூர் கடைவீதி பகுதியில் சாலையோரங்களில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதினால் பஸ்கள் மற்றும் பல்வேறு வாகனங்கள் சென்றுவர பெரிதும் இடையூறாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
தெருநாய்கள் தொல்லை
பெரம்பலூர் மாவட்டம் திருவாளந்துறை பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருவாளந்துறை.