தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

மூடி இல்லாத பாதாள சாக்கடை

கரூர் வடக்கு நரசிம்மபுரத்தில் உள்ள சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடி இல்லாமல் நீண்ட நாட்களாக உள்ளது. இதனால் இந்த வழியாக நடந்து செல்வோரும், வாகனங்களில் செல்வோரும் இரவு நேரத்தில் இந்த பள்ளத்தில் விழும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வடக்கு நரசிம்மபுரம்.

ரவுண்டானா அமைக்க வேண்டும்

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் இருந்து புன்னம்சத்திரம் வரும் சாலை ஈரோடு- கரூர் செல்லும் நெடுஞ்சாலையில் இணைகிறது. இந்நிலையில் ஈரோடு-கரூர், கரூர்-ஈரோடு செல்லும் சாலைகளில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் வேலாயுதம்பாளையம், காகிதஆலை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் புன்னம்சத்திரத்தில் உள்ள நெடுஞ்சாலையில் இணையும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இப்பகுதியில் ரவுண்டானா அமைத்து விபத்தினை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வேலாயுதம்பாளையம்

தாமதமாக நடைபெறும் வடிகால் பணி

கரூர் மாவட்டம், தெற்கு முருகானந்தபுரம் ஈஸ்வரன் கோவில் பின்புறம் உள்ள சாலையில் கழிவுநீர் வடிகால் அமைக்க நீண்ட நாட்களாக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது எந்த வேலைகளும் நடைபெறவில்லை. இதனால் இவ்வழியே வரும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் நடைபெறும் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கரூர்.

பயனற்ற கிராம சேவை மைய கட்டிடம்

கரூர் மாவட்டம், புன்னம் ஊராட்சியில் உள்ள நடுப்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை திறந்து வைத்து செயல்படவில்லை. எனவே உள்ளாட்சித்துறை உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கிராம சேவை மையத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பணியாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நடுப்பாளையம்

சீரமைக்கப்படாத சாலை

கரூர் மாவட்டம், பொன்னியாக்கவுண்டனூரில் இருந்து பழமாபுரம் செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக இந்த தார் சாலை மிகவும் சிதிலமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பொன்னியாக்கவுண்டனூர்


Next Story