தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

பத்திரப்பதிவுக்கு முன்பதிவு செய்வதில் இடையூறு

திருச்சி மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் இணையவழியில் பத்திரப்பதிவுக்கு முன்பதிவு செய்தாலும் ஒதுக்கப்பட்ட நேரத்தில் பதிவு செய்ய இயலாத நிலை உள்ளது. இதுகுறித்து அங்கு பணிபுரிபவர்களிடம் கேட்டால் சர்வர் சரிவர செயல்படவில்லை எனவும், இணையத்திறன் வேகம் மிகவும் குறைவாகவும் உள்ளதாலும் காலதாமதம் ஏற்படுவதாக கூறுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

பொதுமக்கள், திருச்சி.

குண்டும், குழியுமான தார்சாலை

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், தொப்பம்பட்டி அரசு தொடக்கப் பள்ளிக்கு செல்லும் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சரி செய்து தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பழனிச்சாமி, தொப்பம்பட்டி, திருச்சி.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருச்சி மாநகராட்சி 21-வது வார்டுக்கு உட்பட்ட பழைய குட்ஷெட் சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் தேங்கி கழிவுநீர் செல்ல முடியாமல் அடுப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கோமதி, திருச்சி.

பராமரிக்கப்படாத பூங்கா

திருச்சி மாநகராட்சி கே.கே.நகர் லிங்கன் தெருவில் உள்ள திருவள்ளுவர் பூங்கா கடந்த 4-5 ஆண்டுகளுக்கு முன்பு புனரமைக்கப்பட்டு நன்றாக பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது ஏராளமான மூத்த குடிமக்களும், பெண்களும் இங்கு காலை, மாலை நடைப்பயிற்சி செய்வது வழக்கம். இங்குள்ள உடற்பயிற்சி சாதனங்களும் நன்றாக உபயோகத்தில் இருந்தன. இந்த மையத்தில் புல்வெளி ஒன்றும் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அந்த பூங்கா கவனிப்பாரற்ற நிலையில் உள்ளது. நடைபாதையில் உள்ள குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. ஒளி விளக்குகள் மாலை நேரத்தில் ஒரு பகுதியில் மட்டும் ஒளியூட்டுகின்றன. புல்வெளி களைச்செடிகள் மண்டியுள்ளதால், பாம்பு போன்ற உயிரினங்கள் வசிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த நிலையிலும் பலர் இந்த பூங்காவைத்தொடர்ந்து உபயோகப்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது கடந்த 2 நாட்களாக பூட்டப்பட்டநிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடடிவக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தண்டாயுதபாணி, கே.கே.நகர், திருச்சி.

ஆபத்தான மின்கம்பம்

திருச்சி, வயலூர் ரோடு சீனிவாச நகர் கனரா பேங்க் காலனி முதல் தெருவில் மின்கம்பம் அமைக்கப்பட்டு அருகில் உள்ள வீடுகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சீனிவாச நகர்.


Next Story