தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் குள தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் இப்பகுதியில் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும் இப்பகுதியில் குப்பை தொட்டிகள் வைக்கப்படாமல் உள்ளதால் குப்பைகள் சாலையோரம் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
முத்துக்குமார், திருவப்பூர்.
மேற்கூரை இல்லாத பயணிகள் நிழற்குடை
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியில் திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ஊனையூர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த பயணிகள் நிழற்குடை மேற்கூரை இன்றி காணப்படுவதினால் இப்பகுதி மக்கள் மழையிலும், வெயிலிலும் நின்று பஸ் ஏறி பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ஊனையூர்.
பங்களா குளம் மேம்படுத்தப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியின் மையப்பகுதியில் பஸ் நிலையம் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான பங்களா குளம் உள்ளது. மன்னர் காலத்தில் நல்ல கட்டமைப்புடன் உருவாக்கப்பட்ட இந்த குளம் நகரப் பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. ஆனால் இந்த குளத்திற்கு வரும் வரத்து வாய்க்கால்கள் அடைக்கப்பட்டு இருப்பதால் நல்ல மழை பெய்தாலும் குளம் நிரம்புவது இல்லை. மேலும் இந்த குளம் பராமரிப்பு இன்றி உள்ளது. எனவே குளத்தின் நான்கு கரைகளையும் பலப்படுத்தி கம்பிவேலி அமைக்க வேண்டும். மேலும் நடைபாதை தளம் அமைத்து நடைபயிற்சி செய்யவும், பூஞ்செடிகள் அமைத்து பொழுதுபோக்கு பூங்கா உருவாக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கறம்பக்குடி.
பஸ் வசதி வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்காக புதுக்கோட்டையில் இருந்து பெருமநாடு, குடுமியான் மலை, காட்டுப்பட்டி, குளவாய்ப்பட்டி, புதூர் வழியாக அரசு பஸ் சேவை வழங்காததால் இப்பகுதி மக்கள் வெளியூர் செல்ல பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ரகுமத்துல்லா, முக்கண்ணாமலைப்பட்டி.
பயனற்ற அடிபம்பு
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் உள்ள ஒரு தனியார் பேக்கரி அருகில் பயனற்ற நிலையில் போக்குவரத்திற்கு இடையூறாக அடிபம்பு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அன்னவாசல்.