தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

சேறும், சகதியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, மங்களநாடு வடக்கு பகுதியில் உள்ள மண் சாலைகள் சிறிய அளவு மழை பெய்தாலும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மங்களநாடு.

தவறாக எழுதப்பட்டுள்ள ஊர் பெயர்

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, அம்மாச்சத்திரம் பஞ்சாயத்தில் வெள்ளாளப்பட்டி என்னும் ஊர் உள்ளது. இந்த ஊரில் நார்த்தாமலை ரெயில்வே கேட்டிலிருந்து தட்டாம்பட்டி வரை சுமார் 2 கிலோ மீட்டர் வரை கிராமப்புற தேசிய நெடுஞ்சாலை புதிதாக அமைக்கப்பட்டது. அப்போது சாலையோரம் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், வெள்ளாளப்பட்டி என்னும் ஊர் வெள்ளாளவயல் என தவறாக எழுதப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூரில் இருந்து வரும் பொதுமக்கள் இந்த பெயர் பலகையை பார்த்து குழப்பம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வெள்ளாளப்பட்டி.

போலீசார் பற்றாக்குறையால் குற்றச்செயல் அதிகரிக்க வாய்ப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா தலைமையிடமாகும். இங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், 3 சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 30 போலீசார் பணியிடங்கள் உள்ளன. ஆனால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இன்ஸ்பெக்டர் மற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாகவே உள்ளது. மேலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பணியிடங்கள் பல மாதங்களாக நிரப்பப்படவில்லை. இதனால் போதிய போலீசார் இன்றி பாதுகாப்பு பணியில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. கறம்பக்குடி பகுதியில் ஆர்ப்பாட்டம், மறியல் என போராட்டங்கள் அடிக்கடி நடைபெற்று வரும் நிலையில் போலீசார் திணறி வருகின்றனர். போலீசார் பற்றாக்குறையால் குற்றச் செயல்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே கறம்பக்குடி போலீஸ் நிலையத்துக்கு போதிய போலீசார் நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கறம்பக்குடி.

குண்டும், குழியுமான சாலைகள்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, வலையப்பட்டியில் உள்ள பல தெருக்களில் உள்ள சாலைகள் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுந்தரமகாலிங்கம், வலையப்பட்டி.

செயல்படாத போக்குவரத்து சிக்னல்கள்

புதுக்கோட்டை நகரில் ஆங்காங்கே போக்குவரத்து சிக்னல்கள் உள்ளது. இவை செயல்படாமல் உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிக்னல்களை மீண்டும் இயக்கி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வழிப்பாதையை முறையாக அமல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், புதுக்கோட்டை.


Next Story