தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேறும், சகதியுமான சாலை
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை சாமிநாதன் நகர் தெரு மண் சாலையாக உள்ளதால் சிறிது மழை பெய்தாலும் இப்பகுதி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள முதியவர்கள் நடந்து செல்லவும், வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், வடக்கு கார் தெரு, புதுத்தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரம் சிறிய அளவில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் தூர்ந்து போனதால் தற்போது கழிவுநீர் செல்ல வழியின்றி தெங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலை சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கட்டிட பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், சிறுநாவலூர் ஊராட்சி கட்டப்பள்ளி அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில், மழைகாலங்களில் தண்ணீர் பள்ளி அறைகளில் தேங்குமளவுக்கு பாதிப்படைந்ததால், பள்ளி வளாகத்தில் புதிய கட்டிடம் கட்ட அனுமதியளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.19 லட்சம் செலவில் கட்டிட பணிகள் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால், வரவிருக்கும் பருவ மழை காலங்களில் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியதாகி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம், பனையக்குறிச்சி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆபத்தான மின்கம்பத்தை ஆற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொலிவிழந்து காணப்படும் பூங்கா
திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் 4-ம் பிரகாரத்தில் வடக்கு மற்றும் தெற்கு உள்வீதிகளில் திருச்சி மாநகராட்சியின் ஶ்ரீரங்கம் கோட்ட அலுவலகம் வாயிலாக "மதில்சுவர் பூங்கா" பராமரிக்கப்பட்டு வருகின்றது. தற்போது பூங்காவில் மரம், செடி-கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி தருவதுடன், விஷ ஜந்துக்களும் நடமாடிக்கொண்டு பொலிவிழந்து காணப்படுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
போக்குவரத்திற்கு இடையூறு
திருச்சி பீமநகர் போலீஸ் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகளில் கடைகளுக்கு பொருட்களை கொண்டு வரும் லாரிகள் மாலை நேரத்தில் பள்ளிகள் விடும்போது லாரிகளை சாலையோரம் நிறுத்திக்கொண்டு பொருட்களை இறக்கி வருகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறாக உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து, மாலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் பொருட்களை இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.