தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?

பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் கல்யாண் நகரில் உள்ள பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழை, வெயில் காலங்களில் அந்த நிழற்குடையில் பயணிகளால் நிற்க முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

எலும்பு கூடான மின் கம்பம்

பெரம்பலூர் நகராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட புதிய மதனகோபாலபுரத்தில் தனியார் மண்டபம் அருகே உள்ள பகுதியில் மின்கம்பம் ஒன்று சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து எலும்பு கூடாக காட்சியளிக்கிறது. அந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி மிகவும் சேதமடைந்து உள்ளது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் அதனருகே சிறுவர்-சிறுமிகள் விளையாடி வருவது வழக்கம். எனவே சம்பந்தப்பட்ட எந்தவொரு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன்பு அந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, டீ.களத்தூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலை ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது தூர்வாரப்படாமல் தூர்ந்துபோன நிலையில் கழிவுநீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்ட நோய் பரவும் பயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

எரியாத தெருவிளக்குகள்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் முறையாக எரியவில்லை. இதனால் இப்பகுதி பெண்கள் இரவு நேரத்தில் சாலையில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான தார்சாலை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, விராலிப்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை சிதிலமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story