தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வடிகால் வசதி வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் வாடிமாநகர் கடைவீதியில் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடத்தில் சாலையோரத்தில் வடிகால் வசதி அமைக்கப்படாமல் உள்ளதால் தற்போது பெய்த மழைநீர் சாக்கடை நீர்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
புதுக்கோட்டை மாவட்டம், மேட்டுப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை நகராட்சியை சேர்ந்த பொன்னம்பட்டி கிராமத்தில் குளத்துக்கரையோரத்தில் வசிப்பவர்கள் வீடுகளுக்கு செல்லும் மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால் குறுகிய சாலை வழியாக கனரக வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா சித்துப்பாண்டுராம்பட்டியில் இருந்து லக்ஷ்மண் செல்லும் சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பஸ் வசதி இன்றி மக்கள் அவதி
புதுக்கோட்டையில் இருந்து கிளாங்காடு வந்து செல்லும் அரசு பஸ் புதுக்கோட்டை விடுதி கிராமத்திற்கு காலை, மதியம், இரவு என 3 நேரமும் வந்து சென்றது. தற்போது இந்த அரசு பஸ் காலை மட்டுமே வந்து செல்கிறது. மதியமும், இரவும் வந்து செல்லாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆம்புலன்சு வசதி தேவை
புதுக்கோட்டையில் திருக்கோகர்ணம், வெள்ளனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டியாவயல் பை-பாஸ், கருவேப்பிலான் ரெயில்வே கேட், மருத்துவக்கல்லூரி ரோடு, திருவேங்கை வாசல் விளக்கு ரோடு, அடப்பங்கார சத்திரம் ரோடு, ஐ.டி.ஐ. காலனி, அன்னம்மாள்புரம் விளக்கு ரோடு, சிப்காட் நகர் பிரிவு ரோடு ஆகிய இடங்களில் வாகன விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது. இதில் காயமடைவர்கள் சிகிச்சைக்கு உடனடியாக அழைத்து செல்ல போதுமான ஆம்புலன்சு வசதி இல்லை. இதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு ஒரு பொதுவான ஒரு இடத்தில் இருந்தோ, திருக்கோகர்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தோ 108 ஆம்புலன்சு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாகன ஓட்டிகள் அவதி
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியில் அரசு மணல் குவாரி செயல்படுகிறது. இந்த குவாரியில் இருந்து தற்போது பல மாவட்டங்களுக்கு டிப்பர் லாரி மூலம் மணல் எடுத்துச் செல்லப்படுகிறது. மணல் எடுத்துச் செல்லப்படும் லாரிகள் மணல் மீது தார்ப்பாய் போடாமல் செல்வதால் மணல் வெளியே பறந்து செல்கிறது. இதனால் லாரிக்கு பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் சில சமயங்களில் விபத்து ஏற்படும் அபாயமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.