தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வாகனங்கள் ஓட்டும் சிறுவர்கள்
பெரம்பலூர் நகர்ப்பகுதியில் தற்போது 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அதிகளவில் இரு சக்கர வாகனங்களை ஓட்டி வருகின்றனர். அவர்களில் சிலர் விபத்துக்குள்ளாகின்றனர். சிலர் விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போலீசார் சிறுவர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதை தடுக்கவும், அவர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் கொடுக்கும் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும்
பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக மோசமாக காட்சியளிக்கிறது. இதனால் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் ஏற்றி வரும் லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் மற்றும் காய்கறி வாங்கி செல்லும் பொதுமக்கள் அந்த சாலை வழியாக மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் அந்த குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிதாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
மணல் அள்ளுவது தடுக்கப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூரை அடுத்துள்ள லெப்பைகுடிகாடு பகுதியில் உள்ள ஜாமாலியா நகரில் இரவு நேரங்களில் லெப்பைகுடிகாடு வெள்ளாற்றில் அதிகப்படியாக மணல் அள்ளப்படுகிறது. இதனால் லெப்பைகுடிகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடிநீர் குறைந்து கொண்டே வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குண்டும், குழியுமான தார் சாலை
பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் சமத்துவபுரம் தெருவில் செல்லும் சாலைகள் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுவதினால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றன. மேலும் இரவு நேரத்தில் இந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலை தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பயன்பாட்டில் இல்லாத ஏ.டி.எம். எந்திரம்
பெரம்பலூர் வட்டம், செங்குணம் கிராமத்தில் செயல்படும் ஒரு வங்கி கிளையில் செங்குணம், அருமடல், பாலாம்பாடி, கவுள்பாளையம், சிறுகுடல், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வரவு , செலவுக்கான வங்கி கணக்கு தொடங்கியுள்ள நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் நலன் கருதி இந்த வங்கியில் பொருத்தப்பட்டிருந்த ஏ.டி.எம். எந்திரம் சில ஆண்டுகளாகவே பயன்பாட்டில் இல்லை. இதனால் வாடிக்கையாளர்கள் பலரும் பல்வேறு வகையில் அவதியுற்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.