தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

குடிநீர் இன்றி மக்கள் அவதி

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், மேளக்காட்டுப்பட்டி 14-வது வார்டு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் சரியான முறையில் வினியோகம் செய்யப்படாமல் உள்ளதால் இவர்கள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும், தங்களின் அன்றாட தேவைக்கும் போதிய தண்ணீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்

திருச்சி அண்ணாமலை நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது தூர்ந்துபோன நிலையில் பிளாஸ்டிக் கழிவுகளுடன், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கழிவுகளால் சுகாதார சீர்கேடு

திருச்சி மாவட்டம், சமயபுரம்-மண்ணச்சநல்லூர் சாலை அருகில் உள்ள சக்தி நகர் நுழைவு பகுதியில் ஆற்று வாய்க்கால் பாலம் அருகில் கோழி, மீன் கழிவுகள் மற்றும் மனித கழிவுகளை சிலர் கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குடிநீர் குழாயில் உடைப்பு

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், போசம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீரிக்கல் மேட்டில் அரசு பள்ளிக்கு முன்பாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி அவதிப்படும் நிலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான அங்கன்வாடி கட்டிடம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், கே.பெரியபட்டி ஊராட்சி கத்திக்காரன்பட்டியில் உள்ள அங்கன்வாடி கட்டிடமானது விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த அங்கன்வாடியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். எனவே விபரீதம் ஏதேனும் ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தொங்கியவாறு பயணம் செய்யும் மாணவர்கள்

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், பவித்திரத்தில் இருந்து முசிறி வரை செல்வதற்கு காலை நேரத்தில் ஒரே ஒரு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்ஸில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் அதிக அளவில் செல்வதினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணம் செய்வதினால் உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து காலை மற்றும் மாலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story