தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

குடிநீர் வசதி வேண்டும்

பெரம்பலூர் புதிய, பழைய பஸ் நிலையங்களில் பயணிகள் குடிப்பதற்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடைகளில் காசு கொடுத்து தண்ணீர் பாட்டில்கள் வாங்கி குடிக்கின்றனர். இதில் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த பயணிகள் தாகத்துடன் செல்கின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் பஸ் நிலையங்களில் பயணிகள் குடிப்பதற்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, முகமதுபட்டினம் கிராமத்தில் இருந்து கிருஷ்ணாபுரத்திற்கு செல்லும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள தார் சாலையான தற்போது குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயகற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். புதிதாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயத்துடன் செல்கின்றனர். மேலும் அந்தப்பகுதியில் இரவில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆங்காங்கே குழிகளில் மழைநீர் தேங்கி குட்டை போலும் சேறு, சகதியுமாக காட்சியளிக்கிறது. இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் புதிதாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளோம்.

பயணிகள் அவதி

பெரம்பலூரில் இருந்து கொளக்காநாத்தம் செல்லும் 7 எண் கொண்ட அரசு பஸ்சின் பின்பகுதியில் ஏறும் இடத்தில் கைபிடிக்க கம்பி இல்லாததால் கூட்டமாக இருக்கும் சமயத்தில் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை கண்டக்டரிடம் தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாரம் இருமுறை குடிநீர் வழங்க கோரிக்கை

பெரம்பலூர் நகருக்கு தற்போது கொள்ளிட கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் நகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக கொள்ளிடத்தில் அதிக அளவு நீர் கரைபுரண்டு ஓடுவதால் வெள்ள நீரில் மூழ்கியுள்ள கொள்ளிட குடிநீர் கிணறுகளில் இருந்து பெரம்பலூருக்கு குடிநீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் போராட்டங்களுக்கிடையே தற்போது 2 வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் துறை மங்கலம் அரணாரை மற்றும் பெரம்பலூர் டவுன் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். பெரம்பலூர் நகர பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வாரம் இருமுறை குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்யநகராட்சி நிர்வாகமும், மாவட்ட கலெக்டரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?

பெரம்பலூர் ரோஸ் கார்டன் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் தெருவிளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளதால் இரவு நேரங்களில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக இரவு நேரத்தில் நடந்து செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story