தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா?

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கடைவீதியில் கடல் போல் மழை நீர் கரைபுரண்டு செல்கிறது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களும் வழி பாதையை கடந்து செல்ல 1 மணி நேரம் காத்திருந்தனர். இதற்கு முக்கிய காரணம் வடிகால் வசதி சரி செய்யாத காரணத்தாலும், ரெங்கசமத்திரம் ஏரி, சித்தேரி, தாண்டனேரி போன்ற ஏரிகளுக்கு போகும் வரத்துவாரிகள் தூர்வாரப்படாததாலும் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள் அவதி

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் உள்ள சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுவே சிறு-சிறு பள்ளங்கள் அதிகமாக காணப்படுகின்றன. இந்த சிறு-சிறு பள்ளங்களால் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வருவோர் நிலை தடுமாறு கீழே விழுந்து செல்கின்றனர். இதனால் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பஸ் வசதியின்றி மக்கள் அவதி

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்தின் மேற்குப் பகுதியான திருபுரந்தான், அருள்மொழி, காசான்கோட்டை, புதுப்பாளையம், அறங்கோட்டை, கோவிந்தபுத்தூர், சாத்தாம்பாடி, முத்துவாஞ்சேரி ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் கும்பகோணத்திற்கு ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகளும், பொதுமக்களும் தினசரி செல்கின்றனர்.ஆனால் இப்பகுதிக்கு சரியான முறையில் பஸ் வசதி இல்லை. தினசரி காரைக்குறிச்சி வரை ஜெயங்கொண்டம் பஸ்சில் சென்று அங்கிருந்து மற்றொரு பஸ்சில் கும்பகோணம் செல்லும் சூழல் உள்ளது. சில நேரங்களில் காரைக்குறிச்சியில் ஜெயங்கொண்டம் முதல் கும்பகோணம் வரை செல்லும் பஸ்கள் கூட்டநெரிசல் காரணமாக நிற்காமல் சென்று விடுகின்றன. அப்போது பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உட்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வெள்ளை நிறம் பூசப்படாத வேகத்தடைகள்

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியிலிருந்து தெற்கே பெரிய திருக்கோணம் செல்லும் முதன்மை சாலையில் அமைந்துள்ள மு.புத்தூர் கிராமத்தில் நீண்ட காலமாக தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்திலிருந்து அரியலூரில் உள்ள சிமெண்டு ஆலைகளுக்கு தினமும் 24 மணி நேரமும் அசுரவேகத்தில் விபத்துகள் ஏற்படுத்தும் விதமாக டிப்பர் லாரிகள் மூலம் சுண்ணாம்புக்கல் எடுத்துச் செல்வதால் முனியங்குறிச்சி பிரிவு பாதை, சேலத்தார் காடு, மங்கட்டான், மு.புத்தூர் கிராம பகுதிகளில் விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. இதனைகருத்தில் கொண்டு விபத்து நிகழும் 7 இடங்களில் கடந்த ஆண்டு வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. அந்த வேகத்தடைகளில் இந்த நாள் வரை வெள்ளை நிற பட்டைகளும், சிகப்பு நிற பிரதிபலிப்பான்கள் அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் நிலைத்தடுமாறி கீழே விழுந்து விடுவதால் அதிகளவில் காயங்கள் ஏற்படுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கடும் வெயிலில் நிற்கும் மக்கள்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்திற்கு உட்பட்ட சூரியமணல் கிராமத்தில் உள்ள ரேஷன் கடை முன்பு நிழற்குடை எதுவும் அமைக்கப்படாமல் உள்ளதால் இந்த கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கடும் வெயிலில் நின்று பொருட்கள் வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story