தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயனற்ற ஆயத்த ஆடை கட்டிடம்
கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையத்தில் இருந்து திருக்காடுதுறை செல்லும் சாலையின் ஓரத்தில் கடந்த சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஆயத்த ஆடை கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் கட்டிடம் பழுதடைந்து கட்டிடத்தின் மேற்கூரையில் மழைநீர் தேங்கி ஒழுகி வருவதன் காரணமாக அந்த கட்டிடம் பயன்பாடு இல்லாமல் சில ஆண்டுகளாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆபத்தான கிணறு
கரூர் மாவட்டம், கட்டிப்பாளையம் புகழூர் வாய்க்கால் பாலத்தில் இருந்து திருக்காடுதுறை செல்லும் புகழூர் வாய்க்கால் கரைவழியாக செல்லும் தார் சாலை ஓரத்தில் பெரிய கிணறு ஒன்று உள்ளது. இதனால் தார் சாலையின் ஓரத்தில் உள்ள கிணற்றில் தார் சாலை சிறிது சிறிதாக விழுந்து வருகிறது. இதனால் தார் சாலையின் அகலம் குறைந்து வருகிறது. தார் சாலை ஓரத்தில் கிணறு இருப்பதால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இரவில் கிணறு இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுற்றுச்சுவர் கட்டித்தரப்படுமா?
கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் அருகே கட்டிப்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தையொட்டி விவசாய நிலங்கள் உள்ளன. அதேபோல் முன்பகுதியில் தார்சாலை செல்கிறது. இந்நிலையில் இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித் தரப்படவில்லை. இதன் காரணமாக பள்ளிக்கூடத்தை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் இருந்து பாம்புகள், விஷப்பூச்சிகள் ஊர்ந்து பள்ளிக்குள் வருகிறது. இதனால் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் உள்ளனர். எனவே பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தண்ணீர் செல்ல தடை
ஈரோடு மாவட்டம், காரணாம்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து புகழூர் வாய்க்கால் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, பாலத்துறை, தோட்டக்குறிச்சி, தளவாபாளையம் வழியாக என். புதூர் வரை செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. வாய்க்காலில் ஆங்காங்கே ஆகாய தாமரைகள் மற்றும் பல்வேறு வகையான செடி, கொடிகள் தண்ணீரில் மிதந்து வந்து ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் தண்ணீர் செல்ல தடை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
எலும்பு கூடான மின்கம்பம்
கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி அருகே உள்ள கொமட்டேரியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடுபோல் காட்சியளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.