தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையோரத்தில் கட்டப்படும் கால்நடைகள்
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ளது குணமங்கலம் கிராமம். இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் பாதையில் இரு புறங்களிலும் அப்பகுதியில் உள்ள ஒரு சிலர் ஆடு, மாடுகளை சாலையின் ஓரத்தில் கட்டிச் செல்வதால் அவ்வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவ- மாணவிகள் மிகவும் சிரமத்தோடும், பயத்தோடும் பள்ளிக்குச் செல்ல வேண்டி உள்ளது . எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுமா?
அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் சாலைகள் மண்சாலைகளாகவே காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும் போது ஆங்காங்கே பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுகாதாரமற்ற கழிவறை
அரியலூர் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களின் தேவைக்காக பஸ் நிலையத்தில் இலவச கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கழிவறை பராமரிக்கப்படாமல் உள்ளதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பயனற்ற சுகாதார வளாகம்
அரியலூர் அய்யப்பன் ஏரிக்கரை பகுதியில் பொது சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் பராமரிப்பு இன்றி சுகாதார வளாகம் சிதிலமடைந்து காணப்படுவதினால், பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இவற்றால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தொற்று நோய் பரவும் அபாயம்
அரியலூர் மாவட்டம், சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது பெய்ந்த மழைநீர் மீன்சுருட்டி கடைவீதியில் கடந்த ஒரு வாரமாக தேங்கி நிற்பதால், அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.