தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான மின்கம்பம்
கரூர் மாவட்டம், நடையனூரில் இருந்து பேச்சிப்பாறை நவீன எரிவாயு மயானத்திற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் மின் கம்பம் நடப்பட்டு அந்தப் பகுதியில் உள்ள விவசாய கிணறுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த வழியாக பல்வேறு பகுதிகளுக்கு இந்த மின்கம்பத்திலிருந்து 24 மணி நேரமும் மின் வினியோகம் செல்கிறது. இந்நிலையில் மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக மின் கம்பம் மிகவும் சிதிலமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பயனற்ற சுகாதார வளாகம்
கரூர் மாவட்டம், திருக்காடுதுறையில் அப்பகுதி பெண்களின் நலன் கருதி அங்கு உள்ள ரேஷன் கடை அருகே சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதை அப்பகுதி பெண்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சுகாதார வளாகத்தில் போடப்பட்டிருந்த கழிவறை உபகரணங்கள் மற்றும் குழாய்கள் பழுதடைந்து கழிவறையிலிருந்து கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நின்றதன் காரணமாக இந்த சுகாதார வளாகத்தை ஊராட்சி நிர்வாகம் பூட்டி வைத்துள்ளது. இதனால் அப்பகுதி பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
கரூர் மாவட்டம், நத்தமேட்டுபாளையம் முதல் கட்டிபாளையம் வரை புகழூர் வாய்க்காலின் ஓரத்தில் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தார் சாலை ஓரத்தில் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் முளைத்து வளர்ந்து வருகிறது. இதன் காரணமாக தார் சாலை ஓரத்தில் நெடுகிலும் சீமைக்கருவேல மரங்கள் தார் சாலையை ஆக்கிரமித்து வருகிறது. இதனால் இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது சீமைக்கருவேல முள்ளில் மோதி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அரசு பஸ் இயக்க கோரிக்கை
கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே பாலமலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சஷ்டி, கிருத்திகை, அமாவாசை மற்றும் பல்வேறு முக்கிய விசேஷ நாட்களில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இருசக்கர வாகனங்கள் இல்லாதவர்கள் நடந்து சென்று வருகின்றனர். எனவே தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புன்னம் சத்திரம் வழியாக பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மது பிரியர்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்குடை
கரூர்- ஈரோடு நெடுஞ்சாலையில் உள்ள நொய்யல் குறுக்கு சாலையில் பயணிகளின் நலன் கருதி கடந்த சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் நிழற்குடை கட்டப்பட்டது. பஸ் நிறுத்தம் அருகே நிழற்குடை இல்லாததால் பயணிகள் இந்த நிழற்குடையை பயன்படுத்தாமல் பஸ் நிற்கும் இடத்திற்கு சென்று நின்று பஸ்களில் ஏறி, இறங்கி வருகின்றனர். இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் மது பிரியர்கள் மது பாட்டில்களையும், தண்ணீர் பாட்டிலையும், உணவு பொட்டலங்களையும் கொண்டு வந்து சாப்பிட்டுவிட்டு காலியான மது பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு, தண்ணீர் பாட்டில்களையும், உணவு பொட்டலங்களின் கழிவுகளையும் அங்கேயே போட்டுவிட்டு மது போதையில் அங்கேயே படுத்திருந்து செல்கின்றனர். வெயில், மழைக்காலங்களில் கூட இந்த நிழல்கூடத்தில் அமர்ந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.