தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

கரூர் மாவட்டம், குளித்தலை நகர பகுதியில் ஆடு, மாடுகள் நகரப் பகுதியில் முக்கிய சாலைகளில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுபோல பிரதான சாலைகளின் நடுவிலும், சாலை ஓரங்களிலும் ஆடு, மாடுகள் படுத்து கிடப்பதால் வாகனங்கள் ஆடு, மாடுகள் மீது மோதி விபத்து ஏற்படும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. அதுபோல விபத்து ஏற்பட்டால் ஆடு, மாடுகள் உயிரிழப்பதோடு வாகனத்தில் வருபவர்களுக்கும் உயிரழப்பு ஏற்படக்கூடிய நிலை இருக்கிறது. மேலும் மளிகை, காய்கறி உள்ளிட்ட சாலையோர கடைகளில் உள்ள பொருட்களை மாடுகள் உண்பதால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நிறுத்தப்பட்ட அரசு பஸ் இயக்கப்படுமா?

கரூர் மாவட்டம், தரகம்பட்டியில் இருந்து சென்னைக்கு சென்று வந்த அரசு பஸ் கடந்த 2 ஆண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் சென்னைக்கு செல்ல வேண்டும் என்றால் திருச்சி சென்று அங்கிருந்து சென்னைக்கு செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிதிலமடைந்த சுகாதார கழிவறை

கரூர் மாவட்டம், மூலிமங்கலம் அருகே பாண்டிபாளையத்தில் அப்பகுதி பெண்களின் நலன் கருதி சுகாதார கழிவறை கட்டப்பட்டது. அதை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுகாதார கழிவறை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் கழிப்பிட கட்டிடம் மிகவும் சிதிலமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சீமைக்கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

கரூர் மாவட்டம், வேட்டமங்கலத்தில் இருந்து வடுகபட்டி மற்றும் ஆசாரிப்பட்டரை செல்லும் சாலையில் உள்ள புறம்போக்கு நிலங்களில் ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் முளைத்துள்ளது. இந்த சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து முளைத்துள்ளதால் அருகில் உள்ள நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் வற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சீமைக் கருவேல மரத்தில் உள்ள காய்களை கால்நடைகள் சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் அருகில் உள்ள விளைநிலங்களில் எந்த பயிரும் முளைத்து வளர்ச்சி அடைய முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான மின்கம்பம்

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள முத்தனூர்சுடுகாட்டுக்கு செல்லும் பிரிவு சாலை அருகே நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் தார் சாலை ஓரத்தில் மின் கம்பம் நடப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தில் உள்ள மின் கம்பிகள் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் செல்கிறது. மின்கம்பம் நடப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் தற்போது கம்பம் சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story