தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குரங்குகள் தொல்லை
அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கடைவீதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை கடையில் உள்ள பொருட்களை எடுத்துச்செல்வதோடு, குடியிருப்பில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கனரக வாகனங்களால் சேதம் அடையும் சாலைகள்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு சிமெண்டு தயாரிக்க தேவையான மூலப்பொருட்களில் நிலக்கரியும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலக்கரி நெய்வேலி டவுனிலிருந்து டிப்பர் லாரிகள் மூலம் தினசரி ஜெயங்கொண்டம், வி.கைகாட்டி வழியாக அதிக பாரத்துடன் ஏற்றி வரப்படுகிறது. நிலக்கரி ஏற்றி வரும் லாரிகள் வேகத்தடைகள் மீது வேகமாக செல்வதால் சாலைகளில் நிலக்கரி சிதறி விடுகிறது. நிலக்கரி துகள் வழுக்கும் தன்மையுடையதால் சில சமயங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்தும் நிகழ்ந்துள்ளது. மேலும் சுண்ணாம்புக்கல் லாரிகள் அதிக பாரத்துடன் செல்வதால் சாலைகளில் சுண்ணாம்புகள் சிதறி விடுகிறது. மேலும் நிலக்கரி மற்றும் சுண்ணாம்புக்கல் ஏற்றி செல்லும் லாரிகளால் வி.கைகாட்டி முதல் அரியலூர் கலெக்டர் அலுவலகம் வரை ஆங்காங்கே சாலைகள் அதிகளவில் சிதிலமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
போக்குவரத்து நெரிசல்
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் முத்துவாஞ்சேரி சாலையில் சிமெண்டு லாரிகள், நிலக்கரியை ஏற்றிச் செல்லும் லாரிகள், டேங்கர் லாரிகள் என பல்வேறு வகையான லாரிகளும் முதன்மை சாலையிலே நீண்ட நேரமாக நிறுத்தி விடுவதால் அப்பகுதியில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், 108 ஆம்புலன்ஸ் மற்றும் இவ்வழியே செல்லும் பஸ்கள் என அனைத்தும் போக்குவரத்து இடர்பாடுகளில் சிக்கித்தவிக்கிறது. இதோடு இல்லாமல் இரவு நேரங்களிலும் கனரக லாரிகளை விக்கிரமங்கலம் செல்லும் முதன்மை சாலை நிறுத்திவிட்டு டிரைவர்கள் எங்கேயாவது சென்று விடுகிறார்கள். இதனால் வி.கைகாட்டியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆக்கிரமிக்கப்படும் குட்டை
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி, விருத்தாசலம் சாலையில் காய்கறி மார்க்கெட் பின்புறம் உள்ள கோடப்பிள்ளை குட்டை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனால் மழை பெய்யும்போது இந்த குட்டையில் மழைநீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு குட்டையை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நிறுத்தப்பட்ட பஸ்சால் மக்கள் அவதி
அரியலூர் மாவட்டம், காவனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கா. அம்பாபூர் கிராமத்தில் தினமும் அதிகாலையில் 6 மணிக்கு அரியலூர் -நெடுவலூர் பஸ் ஒன்று கா.அம்பாபூர் வழியாக இயக்கப்பட்டு வந்தது. அந்த பஸ்சில் தான் அதிகாலையில் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் பயணம் செய்து வந்தனர். ஆனால் கொரோனா காலத்தில் அந்த பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. பஸ் நின்று போனதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் விளாங்குடிக்கு நடந்து சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.