தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

தெருநாய்கள் தொல்லை

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மதகுகள் சரி செய்யப்படுமா?

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏராளமான ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் அமைக்கப்பட்டுள்ள மதகுகள் உடைந்து காணப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட ஏரிகளில் தற்போது பெய்யும் மழைநீரை முழுமையாக சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஏரிகளில் அமைக்கப்பட்டுள்ள பழுதடைந்துள்ள மதகுகளை உடனே சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையின் ஓரத்தில் இறைச்சி கழிவுகள், கட்டிடக்கழிவுகள், அழுகிய காய்கறி, பழங்கள் உள்ளிட்டவைகளை சிலர் கொட்டிச்செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அவற்றை அகற்றி சுத்தம் செய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மும்முனை மின்சாரம் வேண்டும்

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது நஞ்சை உழவு செய்து வரும் காலகட்டம் என்பதால் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. 3 மணிக்கு பிறகு உழவு செய்ய முடியாத சூழல் உள்ளதால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த காலகட்டத்தில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் மாலை 6 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்கிட மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான சாலை

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் உள்ளே செல்லும் வளைவு அருகே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதில் இரு சக்கர வாகனங்களும், பஸ்களும் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் எது பள்ளம், எது சாலை என்று தெரியாமல் அந்த பள்ளத்தில் இறங்கி விபத்துகள் அதிகமாக ஏற்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி பெரம்பலூர் பஸ் நிலையத்திற்கு ஏராளமான மக்கள் வந்து செல்வதால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story