தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

கிடப்பில் போடப்பட்ட பாலப்பணி

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், சாத்தம்பாடி கிராமத்துக்கும், முத்துவாஞ்சேரி கிராமத்துக்கும் இடையே காரைக்குறிச்சி-வி.கைக்காட்டி நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையில் சிறு பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து பாலப்பணிகளை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தக்காரர் துரிதமாக துவங்கினார். சாலையை துண்டிக்கும் வகையில் பாலத்திற்கான அஸ்திவாரப் பணிகளை தொடங்க ராட்சத பள்ளம் தோண்டப்பட்டது. அதன் பிறகு என்ன காரணத்தினாலோ அப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்துகள் சாலை ஓரத்தில் உள்ள தற்காலிக மண் பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வாகனங்கள் சேற்றில் சறுக்கி விழுவதும், சிக்கிக் கொள்வதும் அடிக்கடி நடைபெறுகிறது. புதிதாக இந்த சாலையில் வருபவர்களுக்கு பாலம் பணிகள் நடைபெறுவதை எச்சரிக்கும் வகையில் எந்த அறிவிப்பு பலகையும் அமைக்கப்படவில்லை. தற்போது மழை பெய்து ராட்சத பள்ளத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கி கிடப்பதால் அப்பகுதியில் விளையாடும் சிறுவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை

வடிகால் வாய்க்கால் அமைக்கப்படுமா?

அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி நெருஞ்சிக்கோரை கிராமத்தில் முறையான கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளதால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. மேலும் தற்போது பெய்யும் மழைநீரும் கழிவுநீரில் கலந்து இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிமெண்டு சாலை அமைக்கப்படுமா?

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் உள்ள இளையபெருமாள் நல்லூர்ஊராட்சியில் உள்ள சிவன் கோவில் தெருவில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு தெருவில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. மழை காலங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான சாலை

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா அலுவலகத்தில் இருந்து இலங்கைச்சேரி கிராமத்திற்கு செல்லும் 2 கிலோ மீட்டர் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இலங்கைச்சேரி மற்றும் ஆதிகுடுக்காடு கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தெருநாய்கள் தொல்லை

அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். அதனால் தெரு நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story