தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே 2 பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் நெடுகிலும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காவிரி ஆற்றுப் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகளில் பல சரியாக எரியவில்லை. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிபட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெரு விளக்குகளை சரிசெய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

சாலையில் பெரிய பள்ளம்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இருந்து கோவிலூர் செல்லும் சாலையில் பாவா நகர் அருகே 2 இடங்களில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இரவு நேரத்தில் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சட்ட விரோத மது விற்பனை

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரத்தில் இருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள மசக்கவுண்டன் புதூர் பிரிவு சாலை அருகே அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் பின்புறம் டாஸ்மாக் பார் உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மது பிரியர்கள் டாஸ்மாக் கடை திறந்ததும் இங்குள்ள பாரில் அமர்ந்து மது அருந்தி செல்வது வழக்கம். இந்நிலையில் டாஸ்மாக் கடை பகல் 12 மணிக்கு மேல் திறக்கப்படுகிறது. இரவு 10 மணி அளவில் மூடப்படுகிறது. இந்த நேரம் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் இங்குள்ள பாரில் மது பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இரவு பகலாக மதுபாட்டில்களை விற்பனை செய்வதால் இரவு நேரங்களிலும், விடியற்காலையிலும், பகல் ஒரு மணி வரையிலும் ஏராளமான இருசக்கர வாகனங்களில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இங்கு வருகின்றனர். பாரில் மது பாட்டில்கள் வாங்க வருபவர்கள் மதுஅருந்தி விட்டு பாட்டில்களை சாலையிலேயே உடைத்து போட்டு செல்கின்றனர். இதனால் பெண்கள் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விழிப்புணர்வு வேண்டும்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த அளவே உள்ள கிணற்று நீரை கொண்டு முருங்கை மற்றும் காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். தற்போது மழை காலம் தொடங்க உள்ள நிலையில் முருங்கை மற்றும் இதர காய்கறி பயிர் வகைகளை பூச்சி தாக்குதலில் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகளுக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும். அப்போது தான் மழைக்காலங்களில் பயிர்களில் பூச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்த முன்கூட்டியே பயிர்களை பாதுகாக்க வசதியாக இருக்கும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயனற்ற பயணிகள் நிழற்குடை

கரூர் மாவட்டம் நொய்யல்-வேலாயுதம்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள புங்கோடையில் அப்பகுதியை சேர்ந்த பயணிகளின் நலன் கருதி நிழற்குடை கட்டப்பட்டது. வெளியூர்களுக்கு பஸ்களில் ஏறி செல்பவர்கள் இந்த நிழற்குடையில் அமர்ந்திருந்து, பஸ்களில் ஏறி சென்று வந்தனர். இந்நிலையில் புங்கோடையில் பழைய பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டப்பட்டது. இதனால் பாலம் உயரமாக கட்டப்பட்டதால் அங்கிருந்த பயணிகள் நிழற்குடை தாழ்வாக உள்ளது. இதன் காரணமாக பயணிகள் அதை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story