தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

சுத்தம் செய்யப்படாத ஊரணி

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை மடத்துக்கடை அருகே சிவகங்கை என்ற மடத்தூரணி உள்ளது. இந்த ஊரணி பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆதனக்கோட்டை சுற்றுவட்டார பொதுமக்களின் குடிநீர்தேவையை பூர்த்தி செய்யும் ஊரணியாக இருந்து வந்துள்ளது. தற்போது இந்த ஊரணியைச் சுற்றிலும் சீமைக்கருவேல மரங்கள் உள்ளிட்ட செடி-கொடிகள் மண்டி புதர்போல் காட்சியளிக்கிறது. இதனால் ஊரணியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால் பொதுமக்கள் இயற்கை உபாதை கழிக்குமிடமாக பயன்படுத்துவதால் ஊரணியைச் சுற்றிலும் துர்நாற்றம் வீசுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் நோய்தொற்று பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. இதனால் ஊரணியைச் சுற்றியுள்ள சீமைக்கருவேல மரங்கள் உள்ளிட்ட செடி-கொடிகள் முட்புதர்களை அகற்றி ஊரணியை தூர்வாரி சுத்தம் செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மின்நுகர்வோர்கள் அவதி

புதுக்கோட்டை மாவட்டம், மின்சார வாரியத்திற்கு தினமும் ஏராளமான மக்கள் மின்கட்டணம் செலுத்த வருகின்றனர். இதில் மின்கட்டணம் செலுத்தும் இடத்தில் முறையான வடிகால் வசதி இல்லாததால் தற்போது பெய்த மழைநீர் அங்கு குளம்போல் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் மின்கட்டணம் செலுத்த வரும் மின் நுகர்வோர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிதிலமடைந்த அடிபம்புகள்

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறமும், வடக்குவீதி ரேஷன்கடை அருகிலும் பொதுமக்கள் பயனுக்காக அடிபம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அடிபம்புகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து பயனற்ற நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

எரியாத உயர்கோபுர மின் விளக்கு

புதுக்கோட்டையில் இருந்து கருவேப்பில்லான் ரெயில்வே கேட் வழியாக, மருத்துவ கல்லூரி செல்லும் புறவழிச் சாலையும், திருச்சி புறவழிச் சாலையும் இணையும் மைய சாலையில் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த உயர்கோபுர மின் விளக்குகள் கடந்த சில மாதங்களாக சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் போதிய வெளிச்சம் இன்றி அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், முக்கண்ணாமலைப்பட்டியில் வடக்கு தெருவில் பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுப்பாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story