தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

சிக்னலை மறைத்து செடி-கொடிகள்

திருச்சி பெஸ்ட்லி பள்ளி ரவுண்டானாவில் அமைக்கப்பட்டுள்ள சிக்னலை மறைத்து செடி-கொடிகள் படர்ந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்திக்கும் நிலை இருந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தெருநாய்கள் தொல்லை

திருச்சி மாவட்டம், பெருவளநல்லூர் ஊராட்சியில் ஏராளமான தெருநாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகளையும், இருசக்கர வாகன ஓட்டிகளையும் கடிக்க துரத்துவதினால் அவர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

போக்குவரத்து சீரமைக்கப்படுமா?

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள ரெங்கநாதபுரம் மருவத்தூருக்கிடையேயான தரைப்பாலம் அகற்றப்பட்டு, மேம்பால வேலைகள் நடைபெற்று வருகின்றன. பாலத்திற்கு ஒட்டி போடப்பட்டுள்ள மாற்று வழியில் மழைவேளைகளில் பஸ்கள் சிக்கிக்கொள்வதால் அவ்வழியாக செல்லும் பஸ்கள் அடிக்கடி நிறுத்தப்படுகின்றன. இதனால் மருவத்தூர், செல்லிபாளயம் செல்லும் பொதுமக்கள் மழைவேளையில் பெரும் இன்னல்களுக்குள்ளாகின்றனர். கிராமமக்களின் நலன்கருதி சம்மந்தப்பட்ட துறையினர் மாற்று வழியில் பஸ்களை, தடையின்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சேறும், சகதியுமான சாலை

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், சிங்களாந்தபுரம் ஊராட்சியிலுள்ள தங்கநகர் பகுதியில் உள்ள சாலைகள், தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்தினரிடம் பலமுறை புகாரளித்தும் பலனில்லாததால், சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

திருச்சி மாநகராட்சி கோ.அபிஷேகபுரம் கோட்டம் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த பொது கழிப்பிடம் இடிக்கப்பட்டு சுமார் ஒரு மாதம் ஆகிறது. இந்த நிலையில் இந்த கழிவறைக்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீர் குழாய் முறையாக அகற்றப்படாததால் இதில் இருந்து தினமும் தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தண்ணீர் வீணாவதை தடுத்து நிறுத்தினர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

வாகன ஓட்டிகள் மீது விழும் கழிவுநீர்

திருச்சி மாநகராட்சி 52-வது வார்டு மேலப்புதூரில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையின் மேல் பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தண்டவாளப்பகுதியில் இருந்து சுரங்கப்பாதை வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் இருச்சர வாகன ஓட்டிகள் மீது கழிவுநீர் கசிந்து விழுந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிமெண்டு சாலை வேண்டும்

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், புலிவலம் கிராமம், ஆதிதிராவிடர் தெருவில் ஒரு பகுதி மட்டும் மண் சாலையாக உள்ளது. இதனால் மழை பெய்யும்போது இப்பகுதியில் சேறும், சகதியுமாக காணப்படுவதுடன் பள்ளத்தில் தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வடிகாலுடன் கூடிய சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாழடைந்த கால்நடை மருத்துவமனை

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் எசனைக்கொரை ஊராட்சி சுமார் 600-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பிரதான தொழில் கால்நடை வளர்ப்பு ஆகும். இதனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மருத்துவமனையில் தண்ணீர், மின்சாரம் போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லை. மேலும் கட்டிடம் பாழடைந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த கட்டிடத்தை இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுகாதாரமற்ற குடிநீர் தொட்டி

திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி வளாகத்தில் அரசினர் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால் மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதாரமற்ற நிலையில் விடுதியின் சுற்றுப்புறமும், இடிந்து விழும் நிலையில் விடுதி கட்டிடமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வேகத்தடைகள் அகற்றப்படுமா?

திருச்சி மாவட்டத்தில் இருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது துறையூர். இது மிகப்பெரிய நகரம் மற்றும் தாலூகாவாகும். சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துறையூரினை சுற்றி அமைந்துள்ளன. துறையூர் மற்றும் அருகில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ளவர்கள் தங்கள் உடல் சார்ந்த மருத்துவத்திற்கு துறையூரில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு சில கடினமான சிகிச்சை முறைகள் துறையூரில் அளிக்க வசதி இல்லாததால் மேற்படி நோயாளிகள் ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட தலைநகரமான திருச்சிக்கு செல்கிறார்கள். விபத்தில் காயம் அடைந்தவர்கள் குறிப்பாக தலைக்காயம் அடைந்தவர்களுக்கு துறையூரில் சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதிகள் இல்லாததால் அவர்களை உடனடியாக திருச்சிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்கிறார்கள். முன்பெல்லாம் துறையூரிலிருந்து திருச்சி அரைமணி நேரத்தில் நோயாளிகளை ஆம்புலன்சில் கொண்டு சென்று போய் சேர்த்தார்கள் தற்போது துறையூரிலிருந்து திருச்சி செல்லும் வழியில் 42 கிலோ மீட்டர் தொலைவிற்குள் நொச்சியம் வரை 24 வேகத்தடைகள் அமைத்ததுள்ளார்கள். இதில் மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்திலிருந்து நொச்சியம் வரையில் மட்டும் 11 வேகத்தடைகள் அமைத்துள்ளார்கள். இதனால் ஆம்புலன்ஸ் இயக்கும் வாகன ஓட்டிகள் இந்த சாலையை கடப்பது குறித்து பதற்றம் அடைகிறார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தேவைஇல்லாத இடங்களில் உள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story