தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

சமூக விரோதிகள் நடமாட்டம்

திருச்சி மாவட்டம், பாலக்கரை தாமோதரன் எடத்தெரு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள காலி இடத்தில் காடுபோல் கருவேல மரங்கள் முளைத்துள்ளன. இதில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. மேலும் இந்த இடத்தை பல்வேறு பகுதிகளை சேர்ந்த மதுப்பிரிவுகள் மற்றும் கஞ்சா அடிப்பவர்கள் பயன்படுத்தி வருகின்றன. இதனால் இப்பகுதியில் பெண்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையில் பள்ளம்

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து லால்குடி, அன்பில், புள்ளம்பாடி, டால்மியாபுரம், கீழப்பழுவூர், அரியலூர், பொய்யூர், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், கங்கைகொண்ட சோழபுரம், மீன்சுருட்டி, காட்டுமன்னார் கோவில், சிதம்பரம், விருத்தாச்சலம், ஆண்டிமடம், தென்னூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய இடங்களுக்கு பயணியர் போக்குவரத்து தனியார் மற்றும் அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் நம்பர் 1 டோல்கேட் வழியாக நடைபெற்று வருகிறது. நம்பர் 1 டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் மிகப் பெரிய பள்ளம் உள்ளது. அதன் அருகில் உள்ள மேம்பாலத்திற்கு கீழே செல்லும் சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. இந்த பள்ளங்கள் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சேறும், சகதியுமான சாலை

திருச்சி மாவட்டம், கே.கே.நகர் சேஷாத்ரி நகர் விரிவாக்கம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால் சாலை தற்போது பெய்த மழையில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

போக்குவரத்திற்கு இடையூறு

திருச்சி மாவட்டம், நவல்பட்டு அண்ணாநகர் சாலைகளில் இரவு, பகல் என எப்போதும் கால்நடைகள் சாலைகளில் நடமாடுவதும், சாலையில் படுத்து உறங்குவதுமாக காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளை கால்நடைகள் முட்ட வருவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஏரிக்கரையில் விரிசல்

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், கோட்டப்பாளையம் மற்றும் வயிறுசெட்டிபாளையம் இடையே உள்ள ஜம்புஏரிக்கு கொல்லிமலை, புளியம் சோலையில் இருந்து நீர் வறுத்து அதிக அளவில் வருகிறது. இதனால் ஜம்புஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் ஏரியின் கரைகள் உடையும் நிலையில் விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. கரை உடைந்தால் அருகில் உள்ள ஊருக்குள் தண்ணீர் புகும் நிலை உள்ளதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குடிநீர் இன்றி மக்கள் அவதி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், கரியமாணிக்கம் மேற்கு கிராமத்துக்கு உட்பட்ட வாத்தலை அம்பேத்கார் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதியான குடிநீர் தினமும் வருவதில்லை. இதனால் இப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதி மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story